விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: சதம் விளாசிய நிக்கோல்ஸ்- 243 ரன்களை குவித்தது நியூசிலாந்து

இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கியது.

பும்ரா அபாரம்

சுப்மன்கில் டாஸ் வென்று நியூசிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தார். இந்திய வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சால் நியூசிலாந்து அணி திணறியது. குறிப்பாக பும்ரா அபாரமாக செயல்பட்டார்.

ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே அவர் நியூசிலாந்து கேப்டன் பொதமை ரன் எதுவும் எடுக்காமல் போல்டாக்கி வீழ்த்தினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கான்வே 4 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

கம்போஜ் பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்தார். நியூசிலாந்து அணி 12 ரன்னில் (3.2 ஓவர்) 2 விக்கெட்டை இழந்தது.

அதைத் தொடர்ந்து ரவீந்திரா 15 ரன்னில் ஆகாஷ் தீப் பந்திலும், மிச்சேல் ஒரு ரன்னில் பும்ரா பந்திலும் அவுட் ஆனார்கள். 52 ரன்னில் அந்த அணி 4 விக்கெட்டை இழந்தது.

மதிய உணவு இடைவேளை

3-வது வீரராக களம் இறங்கிய ஹென்றி நிக்கோல்ஸ் மறுமுனையில் பொறுப்புடன் ஆடினார். 5-வது விக்கெட்டுக்கு அவருடன் விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல் ஜோடி சேர்ந்தார்.

மதிய உணவு இடைவேளையின்போது நியூசிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 60 ரன் எடுத்து இருந்தது.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இந்த ஜோடியை பும்ரா பிரித்தார்.

பிளன்டெல் 5 ரன்னில் அவரது பந்தில் வெளியேறினார். பும்ராவுக்கு கிடைத்த 3-வது விக்கெட்டாகும். அப்போது ஸ்கோர் 70 ஆக இருந்தது. அடுத்து கிளன் பிலிப்ஸ் களம் வந்தார்.

சரிவில் இருந்து மீண்டது

6-வது விக்கெட்டான நிக்கோல்ஸ்-பிலிப்ஸ் ஜோடி விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டது. 35.4-வது ஓவரில் நியூசிலாந்து 100 ரன்னை தொட்டது. இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதத்தை பதிவு செய்தனர்.

நிக்கோல்ஸ் 100 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 50 ரன்னை எடுத்தார். அதை தொடர்ந்து பிலிப்ஸ் 73 பந்தில் 9 பவுண்டரியுடன் 50 ரன்னை எடுத்தார். 20-வது டெஸ்ட்டில் விளையாடும் அவருக்கு 6-வது அரைசதமாகும்.

நிக்கோல்ஸ் சதம்

இந்த ஜோடி இணைந்து 100 ரன்னை எடுத்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினார்கள். 67-வது ஓவரில் நியூசிலாந்து அணி 200 ரன்னை தொட்டது.

நிக்கோல்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 188 பந்துகளில் 12 பவுண்டரியுடன் அவர் 100 ரன்னை தொட்டார். 61-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு 12-வது சதமாகும். அப்போது பிலிப்ஸ் 78 ரன்னில் இருந்தார்.

இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ரன்களை நியூசிலாந்து குவித்தது.

ஹென்றி நிக்கோல்ஸ் சதம் விளாசினார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

SCROLL FOR NEXT