இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான கே.ஸ்ரீகாந்த், கபில் தேவ் தலைமையில் இந்தியா முதல்முறையாக 1983-இல் உலகக்கோப்பையைக் கைப்பற்றியபோது அணியின் முக்கிய அங்கமாகத் திகழ்ந்தார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சென்னை எம்.ஏ.சிதம்பரம் (சேப்பாக்கம்) மைதானத்தின் மூன்று பார்வையாளர்கள் மாடங்களுக்கு (Stands) தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தலைசிறந்த கிரிக்கெட் ஜாம்பவான்களான ஆர்.அஸ்வின், கே.ஸ்ரீகாந்த் மற்றும் எஸ்.வெங்கடராகவன் ஆகியோரின் பெயர்களைச் சூட்ட அதிகாரப்பூர்வமாக முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டுக் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திறப்பு விழா வரும் டிசம்பர் 12-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அன்று மைதானத்தில் நடைபெறும் பிக் பேஷ் லீக் தொடரின் தொடக்க ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதுகின்றன. அந்தப் போட்டி தொடங்குவதற்கு முன், இந்த மூன்று மூத்த கிரிக்கெட் நட்சத்திரங்களின் முன்னிலையிலேயே அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட மாடங்கள் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளன.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வெவ்வேறான காலகட்டங்களில் தமிழகத்திற்குப் பெருமை தேடித்தந்த மூன்று ஜாம்பவான்களின் சாதனைகள்:
இந்தியக் கிரிக்கெட்டின் புகழ்பெற்ற நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் கூட்டணியில் முக்கியப் பங்கு வகித்தவர் எஸ்.வெங்கடராகவன். 1975 மற்றும் 1979-ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மற்றும் இரண்டாவது உலகக்கோப்பைத் தொடர்களில் இந்திய அணிக்குக் கேப்டனாகப் பொறுப்பு வகித்தார். ஆட்டக்காரர், கேப்டன், பயிற்சியாளர், தேர்வுக்குழுத் தலைவர், சர்வதேச நடுவர், போட்டிப் நடுவர் என கிரிக்கெட்டின் பல்வேறு பரிமாணங்களில் முத்திரை பதித்த அரிய சாதனையாளர்.
இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான கே.ஸ்ரீகாந்த், கபில் தேவ் தலைமையில் இந்தியா முதல்முறையாக 1983-இல் உலகக்கோப்பையைக் கைப்பற்றியபோது அணியின் முக்கிய அங்கமாகத் திகழ்ந்தார். பின்னர் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டவர், 2011-இல் தோனி தலைமையில் இந்தியா மீண்டும் உலகக்கோப்பையை வென்றபோது இந்தியத் தேர்வுக்குழுவின் தலைவராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நவீன சர்வதேசக் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராகத் திகழும் ஆர்.அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அளவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளராகச் சாதனை படைத்துள்ளார். தமிழகக் கிரிக்கெட் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எண்ணற்ற வெற்றிகளைப் பெற்றுத் தந்தவர். தமிழ்நாடு கிரிக்கெட்டின் பொற்கால வரலாற்றைக் கௌரவிக்கும் வகையில் டிஎன்சிஏ எடுத்துள்ள இந்த முடிவுக்கு விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.