தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 41-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 5 தினங்களாக நடைபெற்றது.
இதில், தமிழக அணி 317.2 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
பெண்கள் பிரிவிலும் (175.2 புள்ளிகள்) முதலிடம் பிடித்தது. 20 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவிலும் மற்றும் 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவிலும் தமிழ்நாடு சாம்பியன் பட்டம் வென்றது.
அரியானா அணி ஒட்டு மொத்த பிரிவில் 303 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தது. ஆண்கள் பிரிவில் உத்தரபிரதேசம் (145 புள்ளிகள்) முதலிடம் பிடித்தது.
தமிழகத்தை சேர்ந்த நீல் சாம்ராஜ் (18 வயதுக் குட்பட்ட பிரிவு), அம்ப்ரிஷ், அபிநயா ராஜராஜன் (20 வயதுக்–குட்பட்ட பிரிவு) ஆகியோர் சிறந்த வீரர், வீராங்கனையாக தேர்வு பெற்றனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு பரிசு கோப்பையை வழங்கினார்.
தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டி.கே.ராஜேந்திரன், துணைத் தலைவர் லீமா ரோஸ் எம்.எல்.ஏ., தடகள சங்கத்தின் திட்டமிடல் மற்றும் செயலாக்க கமிட்டி தலைவர் சி. லதா, தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சிவகுமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.