விளையாட்டு

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மூன்று முறை தவறாக இசைக்கப்பட்ட தேசிய கீதம் - மன்னிப்புக்கோரிய நகோயா மேயர்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் போதே ஜப்பான் மீது பல்வேறு நிர்வாகக் குளறுபடிகள் குறித்த விமர்சனங்கள் எழுந்திருந்தன.

ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஒரே நாளில் மூன்று முறை தவறான தேசிய கீதங்கள் இசைக்கப்பட்ட சம்பவத்திற்கு, அந்நகரின் மேயர் இச்சிரோ ஹிரோசாவா மன்னிப்பு கோரியுள்ளார்.

ஜப்பானின் ஐச்சி மாகாணத்தின் தலைநகரமான நகோயாவில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திங்கள்கிழமை நடந்த ஆண்களுக்கான பாரா தேக்வாண்டோ போட்டியில் தைவான் நாட்டைச் சேர்ந்த வீரர் தங்கம் வென்றார். வெற்றிக்கு பின்னர் அவருக்கு பதக்கம் வழங்கப்பட்டபோது ஈரானின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.

தவறை அதிகாரிகள் விழா முடிந்த பின்னரே உணர்ந்தனர். இதனால் அதிருப்தியடைந்த தைவான் குழுவினர் போட்டி அமைப்பாளர்களிடம் தங்களது எழுத்துப்பூர்வமான கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

தொடர்ந்து அதே நாளில் நடந்த பெண்களுக்கான தேக்வாண்டோ போட்டியில் மங்கோலிய வீராங்கனை தங்கம் வென்றார். இவருக்கும் ஈரானின் தேசிய கீதமே போடப்பட்டது.

உடனடியாக மங்கோலியக் குழுவினர் இதனைச் சுட்டிக்காட்டியதால் இசை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர், மங்கோலியக் குழுவினர் தங்களிடம் இருந்த தங்களது நாட்டுத் தேசிய கீதத்தின் இசையை அதிகாரிகளிடம் வழங்கிய பிறகே அது முறையாக ஒலிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சீனா மற்றும் ஈரான் அணிகளுக்கு இடையேயான மகளிர் வாலிபால் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, சீனாவின் தேசிய கீதத்திற்குப் பதிலாக தென் கொரியாவின் தேசிய கீதம் சுமார் 5 விநாடிகள் தவறாக ஒலிபரப்பப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டுச் சரிசெய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த தவறுகளுக்கு நகோயா மேயர் இச்சிரோ ஹிரோசாவா மன்னிப்புக் கோரியுள்ளார்.

“இது ஏற்றுக்கொள்ள முடியாதது, அல்லது சொல்லப்போனால், இது வேதனையளிக்கிறது. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடந்த முதன்மை ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் போதே ஜப்பான் மீது பல்வேறு நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் தங்குமிடக் குறைபாடுகள் போன்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா விளையாட்டுப் போட்டிகளிலும் இத்தகைய தவறு நேர்ந்திருப்பது சர்வதேச அளவில் விளையாட்டு வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

SCROLL FOR NEXT