விளையாட்டு

விளையாட்டு வீரர் நீரஜ் யாதவ் சாவில் மர்மம் நீடிப்பு- உடன் வந்த தோழியிடம் விசாரணை நடத்த உறவினர்கள் கோரிக்கை

நீரஜ் யாதவ் ஏற்கனவே இறந்துவிட்டதாக அங்குள்ள காவலத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விளையாட்டு உலகில் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த இளம் சாதனையாளர் ஒருவரின் விபரீத முடிவு ஒட்டுமொத்த விளையாட்டு பிரியர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சிறுவயதில் ஏற்பட்ட உடல்நல பாதிப்பை கடந்து, தடகள களத்தில் பல சாதனைகளை படைத்த ஒரு விளையாட்டு வீரரின் வாழ்வு சோகத்தில் முடிவடைந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நீரஜ் யாதவ் (வயது 42). ஹரியானாவின் சோனிபட் பகுதியில் அன்ஷ்னீர் விளையாட்டு அகாடமியை நடத்தி வந்தார். இவருக்கு மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

ஆசிய பாரா போட்டிகளில் 3 முறை தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த நீரஜ், வடகிழக்கு டெல்லியில் உள்ள மௌஜ்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அவருடைய காரின் அருகாமையில் பிணமாக கிடந்தது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

விசாரணை

நேற்று முன்தினம் சம்பவத்தன்று அதிகாலை 12.08 மணி அளவில் ஜிடிபி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட நீரஜ் யாதவ் ஏற்கனவே இறந்துவிட்டதாக அங்குள்ள காவலத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த ஜாப்ராபாத் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தற்காலிகமாக இயங்கி வரும் ஜிடிபி அவசர சிகிச்சை பிரிவில் இருந்து நீரஜ் யாதவ் உடல் ஏற்கனவே பிரேத பரிசோதனைக்காக ஜிடிபி மருத்துவமனை பிணவறைக்கு மாற்றப்பட்டு இருந்தது தெரியவந்தது.

விசாரணையின்போது நீரஜ் யாதவை மருத்துவமனைக்கு அழைத்து வந்த பெண் என்பது கண்டறியப்பட்டது. அவர் 2025 டிசம்பர் முதல் நீரஜ் யாதவ் உடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

பின்னர், அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. நேற்று முன்தினம் சோனிபட் சென்ற அந்த பெண், இனிமேல் தொடர்பில் இருக்க முடியாது என்று நீரஜ் யாதவிடம் கூறி உள்ளார்.

இதன் பின்னர் நீரஜ் யாதவ் அந்த பெண்ணை தன்னுடைய காரில் ஏற்றி கொண்டு வந்து மௌஜ்பூர் பகுதியில் இறக்கி விட்டுள்ளார்.

பரபரப்பு

இரவு 9 மணி அளவில் மௌஜ்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தின் 1-வது நுழைவு வாயில் அருகே நீரஜ் யாதவை பார்ப்பதற்காக அந்த பெண் மீண்டும் வந்துள்ளார்.

அப்போது, சாலையில் காரின் அருகே நீரஜ் யாதவ் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் பி.என்.எஸ்.எஸ். பிரிவு 194-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் எந்தவொரு தற்கொலை கடிதமோ அல்லது வீடியோ பதிவோ கிடைக்கவில்லை என்று காவலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நீரஜ் யாதவின் உறவினர் ஒருவர் கூறும்போது," கடுமையாக போராடி சாதனைகளை படைத்த அவர், இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார் என்பதை நம்ப முடியவில்லை. மேலும், அவருடன் இருந்த பெண் குறித்து குடும்பத்தினருக்கு தெரியாது. அவரது பங்கு குறித்து விசாரிக்கப்பட வேண்டும்" என்றார்.

சாதனை

7 வயதில் போலியோ பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட போதிலும், நீரஜ் யாதவ் தனது விளையாட்டு கனவை விடவில்லை. 2005 முதல் 2012 வரை சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி டென்னிஸ் விளையாடிய அவர், பின்னர் தடகளத்திற்கு மாறினார்.

2015-ல் டெல்லி மாநில போட்டியில் குண்டு எறிதல், ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதலில் தங்கம் வென்று திருப்புமுனையை ஏற்படுத்தினார். 2018 ஜகார்த்தா ஆசிய பாரா போட்டியில் ஈட்டி எறிதலில் ஆசிய சாதனையுடன் தங்கம் வென்றார்.

தொடர்ந்து 2023 ஹாங்சோ ஆசிய பாரா போட்டியில் ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதலில் மேலும் இரண்டு தங்கங்களை வென்று சாதனை படைத்தார்.

மன உளைச்சல்

இருப்பினும், 2023-ல் பெங்களூருவில் நடத்தப்பட்ட சோதனையில் ஸ்டானோசோலோல் என்ற ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டதால், அவருக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை 4 ஆண்டுகள் தடை விதித்தது.

இந்த தடையால் ஐச்சி-நகோயா ஆசிய பாரா போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனதுடன், அரசு வழங்கும் ரொக்கப்ப ரிசுகளையும் பெற முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்திருக்கக்கூடும் என்று இந்தியாவின் தலைமை பாரா தடகள பயிற்சியாளர் எஸ். சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT