விளையாட்டு

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக மெஸ்ஸி அறிவிப்பு!

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கால்பந்து ஜாம்பவான், அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து தனது அதிகாரப்பூர்வ ஓய்வை அறிவித்துள்ளார்

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.,

இறுதிப் போட்டி முடிந்து இவ்வளவு காலம் ஆன நிலையில், நீண்ட யோசனைக்குப் பிறகு, நான் தேசிய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் அறிவிக்க விரும்புகிறேன்.

இது ஒரு வேதனையான முடிவு, எனது ஆன்மாவின் ஆழம் வரை மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. ஆனால், அதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை நான் உணர்கிறேன்.

நாம் அனைத்தையும் சாதித்த இந்தக் கடந்த சில ஆண்டுகளில் மட்டுமல்ல, அதற்கு முன்பும் கூட, என்னிடம் இருந்த அனைத்தையும் நான் எப்போதும் கொடுத்தேன் என்று உங்களிடம் சத்தியம் செய்கிறேன்.

இந்தச் சீருடைக்காகவும், கால்பந்தின் மூலம் உங்களை மகிழ்ச்சியாகவும், அர்ஜென்டினா அணியைச் சேர்ந்தவராக இருப்பதில் பெருமையாகவும் உணர வைப்பதற்காகவும் நான் எப்போதும் போராடி, என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்தேன்.

காலம் குறைந்து வருகிறது, அத்தியாயங்கள் முடிவுக்கு வருகின்றன, இது என்னை மிகவும் காயப்படுத்தும் ஒரு அத்தியாயம். தேசிய அணியில் ஒரு அங்கமாக இருப்பதை நான் நேசித்தேன், நேசித்திருக்கிறேன், எப்போதும் நேசிப்பேன்.

என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்துவிட்டேன்; கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் மீதமில்லை, மேலும், இங்கு இருக்கத் தகுதியான சில சிறந்த இளம் வீரர்கள் உருவாகி வருகிறார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக நீங்கள் காட்டிய அனைத்து அன்புக்கும் நன்றி. மைதானத்தில் இருந்து உங்கள் குரலைக் கேட்பதை மிகவும் மிஸ் செய்வேன். இனி நான் உங்களில் ஒருவனாக, வெளியிலிருந்து உங்களை உற்சாகப்படுத்தி ஆதரவளிப்பேன் (மகிழ்ச்சியான மற்றும் கடினமான என அனைத்து நேரங்களிலும் உங்களுடன் உடன் இருப்பேன் - குறிப்பாக கடினமாக நேரங்களில்)

எப்போதும் என்னுடன் இருந்து, இந்த அழகான, ஆனாலும் மிகவும் கடினமான பயணத்தில் என்னுடன் வந்த என் குடும்பத்தினருக்கு நன்றி. இந்தப் பாதையைப் பகிர்ந்துகொண்ட ஒவ்வொரு பயிற்சியாளருக்கும், சக வீரருக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி. மறக்க முடியாத நினைவுகளையும், தருணங்களையும் நான் என்னுடன் எடுத்துச் செல்கிறேன்.

ஒரு காலத்தில் நாம் கனவு மட்டுமே கண்ட தருணங்களை, என் சக வீரர்களுடன் சேர்ந்து உங்களுக்கு வழங்கிய மன அமைதியுடனும், பெருமையுடனும் நான் விடைபெறுகிறேன். உங்கள் அனைவருடனும் பயணித்தது ஒரு அற்புதமான அனுபவம். நான் உங்களை நேசிக்கிறேன்!

என்னை அர்ஜென்டினாக்காரனாக உருவாக்கிய இறைவனுக்கு நன்றி.

வெற்றி பெற வாழ்த்துகள்!

இறுதிப் போட்டிக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜூலை 21 அன்று இந்த வார்த்தைகளை எழுதினேன். என் தந்தைக்கு நடந்த சம்பவத்திற்குப் பிறகு, இன்று முன்பை விட நான் இந்த முடிவில் உறுதியாக இருந்தேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

போட்டிகள் & கோல்கள்:

அர்ஜென்டினா அணிக்காக 207 போட்டிகளில் விளையாடி 125 கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் அதிக போட்டிகளில் விளையாடிய மற்றும் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இறுதிப் போட்டி:

ஜூலை 2026 பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா 1-0 எனத் தோல்வியடைந்ததே மெஸ்ஸியின் கடைசி சர்வதேச போட்டியாகும்.

முன்பே கணிக்கப்பட்ட முடிவு

பிஃபா உலகக் கோப்பை 2026 தொடரின் இறுதிப்போட்டிக்கு பின்னர் மெஸ்ஸி ஓய்வை அறிவிக்க உள்ளார் என முன்னரே செய்திகள் வெளியாகின. காரணம் இன்ஸ்டாகிராமில்இதற்கு முன்னதான சிலப் பதிவுகளில் 2006 முதல் தற்போது வரையிலான சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

அப்போதே ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்திருந்தது. இதனைத்தொடர்ந்து அர்ஜெண்டினா அணித் தோல்வி, அவர் தந்தை இறந்தது உள்ளிட்ட சம்பவங்கள் இந்த ஓய்வு முடிவுக்கு வழிவகுத்ததாக கூறப்படுகிறது.