விளையாட்டு

ஆசிய மல்யுத்த அணி தேர்வுக்கான போட்டி: நம்பர் 1 வீராங்கனைக்கு அதிர்ச்சி அளித்த மீனாட்சி கோயத்

வினேஷ் போகத் விடை பெற்ற பிறகு 53 கிலோ எடைப்பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வந்த அன்திம் பன்ஹாலை வீழ்த்தி இந்திய அணியில் தனது இடத்தை மீனாட்சி உறுதி செய்தார்.

மாலை மலர்

புதுடெல்லி:

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கிர்கிஸ்தானில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான போட்டி டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் இறுதி சுற்றில் அரியானாவை சேர்ந்த 25 வயது மீனாட்சி கோயத், உலக சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கம் வென்ற 21 வயது அன்திம் பன்ஹாலை சந்தித்தார்.

வினேஷ் போகத் விடை பெற்ற பிறகு 53 கிலோ எடைப்பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் அன்திம் பன்ஹால் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அபாரமாக செயல்பட்ட மீனாட்சி 6-2 என்ற புள்ளி கணக்கில் அன்திம் பன்ஹாலுக்கு அதிர்ச்சி அளித்து இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்தார்.

சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு உள்நாட்டுப் போட்டியில் அந்திம் பங்கல் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். இதற்கு முன்பு ஆசிய யு-23 சாம்பியன்ஷிப்பில் மீனாட்சி தங்கம் வென்றவர். ஏற்கனவே அந்திமிடம் மூன்று முறை தோற்றிருந்த மீனாட்சி, இந்த முறை கச்சிதமான தற்காப்பு ஆட்டத்தின் மூலம் அவரைத் தோற்கடித்தார்.

நீலம் (50 கிலோ), ஹன்ஷிகா (55 கிலோ), மனிஷா பன்வாலா (57 கிலோ), நேஹா சங்வான் (59 கிலோ), மோனிகா (65 கிலோ), மான்சி லாதெர் (68 கிலோ), ஹர்ஷிதா (72 கிலோ), காஜல் (76 கிலோ) ஆகியோர் தங்கள் எடைப்பிரிவில் வெற்றி கண்டனர்.

இதேபோல் ஆண்கள் பிரிவில் அங்குஷ் (57 கிலோ), அமன் ஷெராவத் (61 கிலோ), சுஜீத் (65 கிலோ), அபிமன்யு (70கிலோ), ஜெய்தீப் (74 கிலோ). சந்தீப் மான் (79 கிலோ), முகுல் தாஹியா (86 கிலோ), புனீத் குமார் (92 கிலோ), விக்கி (97 கிலோ), தினேஷ் (125 கிலோ) ஆகியோர் தங்கள் எடைப்பிரிவில் வெற்றியை ருசித்து அணிக்கு தேர்வானார்கள்.