விளையாட்டு

சானியாவிற்குப் பிறகு முதல் இந்திய வீராங்கனை: வரலாற்று சாதனை படைத்த மாயா

ஒரு செட் கூட இழக்காமல் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் அவர் தனது வருகையை உரக்க பறைசாற்றினார்.

இந்தியாவின் இளம் நட்சத்திரம் மாயா ராஜேஷ்வரன் ரேவதி, இந்திய டென்னிஸ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். 2012-இல் சானியா மிர்சாவிற்குப் பிறகு, WTA டூர் அளவிலான ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

உலக தரவரிசையில் 669-ஆவது இடத்தில் இருக்கும் 17 வயதான மாயா, சென்னை ஓபன் தொடரின் இரண்டாவது சுற்றில், தரவரிசையில் 277-ஆவது இடத்தில் உள்ள போலந்தின் வெரோனிகா ஃபால்கோவ்ஸ்காவை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். இதற்கு முந்தைய இரண்டு சென்னை ஓபன் தொடர்களிலும் எந்தவொரு இந்திய வீராங்கனையும் இரண்டாவது சுற்றை தாண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காத்திருப்புக்கு முடிவு:

இந்திய மகளிர் டென்னிஸை பொறுத்தவரை இது ஒரு மிக முக்கியமான மைல்கல். பிப்ரவரி 2012-ல் பட்டாயா ஓபன் தொடரில் சானியா மிர்சா காலிறுதிக்கு முன்னேறிய பிறகு, சுமார் 15 ஆண்டுகள் கழித்து, ஒரு இந்திய வீராங்கனை WTA டூர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இந்த சீசனில் தொழில்முறை டென்னிஸ் களத்தில் மாயா மிக வேகமாக முன்னேறி வருகிறார். அக்டோபர் மாதம் போர்ச்சுகலின் லாகோஸில் நடைபெற்ற W35 தொடரில், தகுதிச் சுற்று மூலம் நுழைந்து, ஒரு செட் கூட இழக்காமல் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் அவர் தனது வருகையை உரக்க பறைசாற்றினார்.

இளம் இந்திய வீராங்கனை:

அதே தொடரில், உக்ரைனின் யெலிசாவெட்டா கோட்லியாருடன் இணைந்து இரட்டையர் பிரிவிலும் அவர் பட்டம் வென்றார். இதன் மூலம், சானியா மிர்சாவிற்கு பிறகு தொழில்முறை ஒற்றையர் பட்டத்தை வென்ற மிக இளம் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

மாயா சமீபத்தில் ஸ்பெயினில் உள்ள ரஃபா நடால் அகாடமியில் இருந்து, தெற்கு பிரான்சில் உள்ள எலைட் டென்னிஸ் சென்டருக்கு தனது பயிற்சியை மாற்றிக்கொண்டார்.

இருப்பினும், இந்த வெற்றி அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. ஆட்டத்தின் போது இரு வீராங்கனைகளும் பலமுறை சர்வீஸை இழந்தனர், மேலும் பல 'டபுள் ஃபால்ட்'மற்றும் தேவையற்ற தவறுகளை செய்தனர். ஆனால், மாயாவின் ஆக்ரோஷமான ஆட்டமும், முக்கியமான தருணங்களை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் திறனும் அவருக்கு வெற்றியை தேடித்தந்தன.

SCROLL FOR NEXT