இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இந்திய அணி முதல் 3 ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருந்தது.
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் இரண்டு ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், வெல்லிங்டனில் நடந்த 3-வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியது.
ஆக்லாந்தில் நேற்று நடந்த 4-வது ஆட்டத்தில் நியூசிலாந்து 87 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 4 போட்டி முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஹேமில்டனில் நாளை (1-ந்தேதி) நடக்கிறது.
ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி 4-வது போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக அதிரடியாக ஆடும் பேட்டிங் துறை சொதப்பிவிட்டது. பேட்டிங் வரிசையில் செய்யப்பட்ட மாற்றமும் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், பந்து வீச்சு தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் உள்ளது. கடைசி ஆட்டத்துக்கான அணியில் மாற்றம் செய்யப்படும் என்று கருதப்படுகிறது.
3-வது போட்டியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். அவர் 19 பந்தில் 45 ரன் எடுத்தார். மேலும் அவரும் அபிஷேக்சர்மாவும் தொடக்க ஜோடியாக 7.1 ஓவரில் 133 ரன் எடுத்தது.
இஷான் கிஷன் அணிக்கு திரும்பியதால் அவர் நேற்று கழற்றி விடப்பட்டார். இந்த ஆட்டத்தில் இஷான் கிஷன் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
இதனால் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதே போல ஒரு போட்டியிலும் ஆடாத ஷிவம் துபே, குல்தீப் யாதவ் உள்ளிட்டோருக்கு அணி நிர்வாகம் வாய்ப்பை வழங்க வேண்டிய நிலை இருக்கிறது. 20 ஓவர் தொடரை வெற்றியுடன் முடிக்க இந்திய அணி ஆர்வத்துடன் உள்ளது.
சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி நேற்றைய போட்டியை போலவே நாளைய ஆட்டத்திலும் அதிரடியை வெளிப்படுத்தும் வேட்கையில் உள்ளது.
அந்த அணி வீரர் பிலிப்ஸ் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் இந்த தொடரில் 1 சதம், 2 அரை சதத்துடன் 276 ரன்கள் குவித்துள்ளார்.
பிலிப்ஸ் இந்திய பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளார். பந்துவீச்சில் ஜேக்கப் டபி, கேப்டன் சான்ட் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் 35 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 19-ல், நியூசிலாந்து 13 -ல் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டம் டை ஆனது.
நாளைய போட்டி இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.