விளையாட்டு

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.

இந்தியா சார்பில் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி, பிவி சிந்து, உன்னதி ஹூடா, சிராக் ஷெட்டி-சாத்விக் ரங்கிரெட்டி ஜோடி, தனிஷாகிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின் கோகோ வட்னாபே உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜப்பான் வீரர் 21-16, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் லக்சயா சென் முதல் சுற்றோடு வெளியேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, தாய்லாந்தின் குன்லவுட் விதீசன் உடன் மோதினார்.

இதில் விதீசன் முதல் செட்டை 21-19 என வென்றார். இதற்கு பதிலடியாக ஆயுஷ் ஷெட்டி 2வது செட்டை 25-23 என போராடி கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை விதீசன் 21-15 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதனால் ஆயுஷ் ஷெட்டியும் முதல் சுற்றோடு வெளியேறினார்.

இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சீன தைபேயின் ஹூவாங் யூ-சன் உடன் மோதினார்.

இதில் உன்னதி ஹூடா முதல் செட்டை 21-16 என வென்றார். இதற்கு பதிலடியாக சீன தைபே வீராங்கனை சிறப்பாக ஆடி அடுத்த இரு செட்களை 21-16, 21-15 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் உன்னதி ஹூடாவும் தொடரில் இருந்து வெளியேறினார்.

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றிலேயே இந்தியாவின் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி, உன்னதி ஹூடா ஆகியோர் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி காயத்தால் முதல் சுற்றோடு வெளியேறியது.

இந்தியாவின் பி.வி.சிந்துவும், தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி நாளை நடைபெறும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.