பர்மிங்ஹாமில் இங்கிலாந்து, இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 47.5 ஓவரில் 258 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவின் அக்சர் படேல் 4 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து களமிறங்கிய இந்தியா 45.2 ஓவரில் 262 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அக்சர் படேல், வாஷிங்டன் ஜோடி அசத்தலாக ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். இதன்மூலம் ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில், பும்ரா தனது அபார பந்துவீச்சால் இரு சாதனைகளைப் படைத்துள்ளார்.
இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்கை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம், இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியப் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.
இதற்கு முன் ரவீந்திர ஜடேஜா 30 விக்கெட்டுடன் முதலிடத்தில் இருந்தார். தற்போது 31 விக்கெட்டுடன் பும்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இதேபோல், ஹாரி புரூக்கின் விக்கெட் பும்ராவின் ஒருநாள் கிரிக்கெட்டில் 150-வது விக்கெட்டாகும்.
இந்திய அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளைக் கடந்த இந்தியப் பந்துவீச்சாளர்களில் (4605 பந்துகள்) பும்ரா 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் முகமது ஷமி (4070 பந்துகள்) முதலிடத்திலும், குல்தீப் யாதவ் (4513 பந்துகள்) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.