விளையாட்டு

ஐ.பி.எல். அணிகளின் எண்ணிக்கையை உயர்த்த திட்டம்?- பிசிசிஐ செயலாளர் சைக்யா விளக்கம்

ஐ.பி.எல்.-ன் 20-வது சீசன் என்பதால், மிகவும் பிரமாண்டமாக அமையும்.

ஐ.பி.எல். அணிகளின் எண்ணிக்கையை உயர்த்தப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சைக்யா விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் தேவஜித் சைக்யா நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

'ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அணிகளின் எண்ணிக்கையை 10-ல் இருந்து 12-ஆக உயர்த்துவது குறித்து இதுவரை அதிகாரபூர்வமாகவோ அல்லது அதிகாரபூர்வமற்ற முறையிலோ எந்த ஆலோசனையும் நடக்கவில்லை.

இப்போதைக்கு அணியின் எண்ணிக்கையை உயர்த்தும் எண்ணம் இல்லை. நாங்கள் தற்போது 2027-ம் ஆண்டு நடக்க உள்ள ஐ.பி.எல். தொடர் மீது கவனம் செலுத்தி வருகிறோம். இது ஐ.பி.எல்.-ன் 20-வது சீசன் என்பதால், மிகவும் பிரமாண்டமாக அமையும். அந்த போட்டி குறித்தே நாங்கள் சிந்திக்கிறோம். அதற்கு அப்பால் எதையும் யோசிக்கவில்லை.

2028-ம் ஆண்டில் ஐ.பி.எல். அணிகளின் எண்ணிக்கை உயர்கிறது என்று வெளியான செய்திகள் சிலரது கற்பனையில் உருவான யூகங்களே தவிர, அவற்றில் உண்மை இல்லை. இதேபோல் அடுத்த ஆண்டு நடைபெறும் மெகா ஏலத்திற்கு அணிகள் செலவழிக்கும் ஏலத் தொகை ரூ.125 கோடியில் இருந்து ரூ.150 கோடியாக உயர்த்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.பி.எல். போட்டியை ஏப்ரல், மே மாதத்திற்கு பதிலாக ஜனவரி மாதம் நடத்தலாம் என்று கொல்கத்தா அணியின் இணை உரிமையாளர் ஜூஹி சாவ்லா வலியுறுத்தியது பற்றி கேட்டபோது பதில் அளிக்க மறுத்து விட்டார்.

SCROLL FOR NEXT