விளையாட்டு

ஐபிஎல் 2027: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம்

இந்திய சூழலையும் உள்நாட்டு வீரர்களையும் நன்கு அறிந்த ஒருவரே பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று தோனி விரும்பினார்.

2017ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஜாகீர் கான், சர்வதேச போட்டிகளில் 610 விக்கெட்டுகளையும், ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளில் விளையாடி 102 விக்கெட்டுகளையும் வீழ்த்திய அனுபவம் கொண்டவர்.

இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் 2027ஆம் ஆண்டு சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிஎஸ்கே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து, கிரிக்கெட் ரசிகர்களிடையே இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தோனி பரிந்துரை

கடந்த 18 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளெமிங், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து சிஎஸ்கேவில் இருந்து விலகினார். பிளெமிங்கிற்குப் பதிலாக புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் முழுப் பொறுப்பும் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்திய சூழலையும் உள்நாட்டு வீரர்களையும் நன்கு அறிந்த ஒருவரே பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று தோனி விரும்பினார். அதன் அடிப்படையில் ஜாகீர் கானின் பெயரை தோனி பரிந்துரைக்க, அதை சிஎஸ்கே உரிமையாளர் ரூபா குருநாத் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு இந்தியர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஜாகீர் கான், சர்வதேச போட்டிகளில் 610 விக்கெட்டுகளையும், ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளில் விளையாடி 102 விக்கெட்டுகளையும் வீழ்த்திய அனுபவம் கொண்டவர். 2011ஆம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பையை வென்றபோது அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராகவும் திகழ்ந்தார்.

ஓய்வுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் செயல்பாட்டு இயக்குநராகவும், பின்னர் சர்வதேச மேம்பாட்டுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், 2025 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வழிகாட்டியாகவும் செயல்பட்டார். நிர்வாக ரீதியிலும், இளைய வீரர்களை வழிநடத்துவதிலும் இவருக்கு இருக்கும் ஆற்றல் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணியின் உரிமையாளர் ரூபா குருநாத் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் ஜாகீர் கானை அன்போடு வரவேற்றுள்ளனர். "இளம் வீரர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பயிற்சியளிப்பதில் ஜாகீர் கான் மிகச் சிறந்த வல்லவர். உலகத் தரம் வாய்ந்த அவரது கிரிக்கெட் அறிவு, சிஎஸ்கே அணியின் முக்கிய கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும்" என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சிஎஸ்கே அணியில் இணைந்தது குறித்து பேசிய ஜாகீர் கான், "ஐபிஎல் வரலாற்றில் மிக வெற்றிகரமான ஒரு அணியின் அங்கமாக மாறுவது எனக்கு கிடைத்த பெருமை. சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே விளையாடிய அனுபவம் மறக்க முடியாதது. இத்தகைய மகத்தான பாரம்பரியம் கொண்ட அணியுடன் இணைவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில சீசன்களாக சென்னை அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறிய நிலையில், வரவிருக்கும் ஏலத்தில் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்வதும், புதிய உத்திகளுடன் அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதும் ஜாகீர் கானின் முன்னால் உள்ள முதன்மையான சவால்களாக உருவெடுத்துள்ளன.

SCROLL FOR NEXT