ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் உத்வேகத்துடன் சென்னை அணி இன்று தனது கடைசி லீக்கில் மோதுகிறது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறிவிட்டன. மீதமுள்ள ஒரு 'பிளே-ஆப்' இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.
இந்தநிலையில் அகமதாபாத்தில் இன்று (வியாழக்கிழமை) அரங்கேறும் 66-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்சும், குஜராத் டைட்டன்சும் மோதுகின்றன. இந்த சீசனில் இவ்விரு அணிகளுக்கும் இதுவே கடைசி லீக் போட்டியாகும்.
6 வெற்றி, 7 தோல்வி என 12 புள்ளிகளுடன் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 'பிளே-ஆப்' வாய்ப்பில் லேசாக தொங்கிக் கொண்டிருக்கிறது. கடைசி இரு ஆட்டங்களில் (லக்னோ, ஐதராபாத்துக்கு எதிராக) அடுத்தடுத்து தோற்றது பின்னடைவாகி விட்டது.
சென்னை அணி 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். பஞ் சாப், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் தங்களது கடைசி லீக்கில் தோற்க வேண்டும்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் ரன்ரேட்டில் மிக மோசமான நிலையில் இருப்பதால் அந்த அணி கடைசி லீக்கில் ஜெயித்தாலும் பிரயோஜனம் இருக்காது. இவ்வாறு நிகழ்ந்தால் சென்னையும், ராஜஸ்தானும் தலா 14 புள்ளிகளு டன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட்டில் முன்னிலை பெற்றால் சென்னைக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்.
சென்னை அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சு தொடர்ந்து நிலையாக இல்லை. அதனால் தான் ஒரேயடியாக ஏற்றம் காண முடிய வில்லை. பேட்டிங்கில் சஞ்சு சாம்சன் (2 சதம் உள்பட 477 ரன்) உர்வில் பட்டேல், கார்த்திக் ஷர்மா, பிரேவிஸ் நம்பிக்கை தருகிறார்கள். ஆனால் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் மந்தமான பேட்டிங் கவலையளிக்கிறது.
டோனி முழு உடல்தகுதியை எட்டாத நிலையில் சொந்த ஊருக்கு திரும்பி இருப்பதால் இன்றைய ஆட்டத்திலும் அவர் விளையாட வாய்ப்பில்லை. பந்து வீச்சில் அகீல் ஹூசைன், நூர் அகமது, அன்ஷூல் கம்போஜ் மிரட்ட வேண்டியது அவசி யம். ஏற்கனவே சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் குஜராத்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றுள்ள சென்னை அணி இப்போது அவர்களது இடத்தில் சுடச்சுட பதிலடி கொடுக்க இது சரியான சந்தர்ப்பமாகும்.
சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி 8 வெற்றி, 5 தோல்வி என 16 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறது. கடைசி 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்று வீறுநடை போட்டது.
கேப்டன் சுப்மன் கில் (552 ரன்), சாய் சுதர்சன் (ஒரு சதம், 6 அரைசதம் உள்பட 554 ரன்), ஜோஸ் பட்லர் (412 ரன்) ஆகி யோர் சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் ரபடா (21 விக்கெட்), ரஷித்கான் (16 விக்கெட்) ஜாசன் ஹோல்டர் (7 ஆட்டத்தில் 13 விக்கெட்) கலக்குகிறார் கள்.
புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களில் உள்ள அணிகளுக்கு இறுதிப்போட்டியில் நுழைய இரு வாய்ப்பு கிட்டும். அந்த வகையில் இந்த ஆட்டம் குஜராத்துக்கு முக்கியத்துவம் பெறுகிறது. அவர்கள் சென்னையை வீழ்த்தி டாப்-2 இடத்தை உறுதி செய்ய தீவிரம் காட்டுவார்கள்.
எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ் சமிருக்காது. உள்ளூரில் ஆடுவது அவர்களுக்கு சாதகமாக இருக்கும். இங்கு நடந்த கடைசி 3 ஆட்டங்களில் குஜராத் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது கவ னிக்கத்தக்கது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
சென்னை: சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), உர்வில் பட்டேல், கார்த்திக் ஷர்மா, டிவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, பிரசாந்த் வீர், அகீல் ஹூசைன், நூர் அகமது, அன்ஷூல் கம்போஜ், ஸ்பென்சர் ஜான்சன், முகேஷ் சவுத்ரி.
குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), நிஷாந்த் சிந்து, ஜோஸ் பட்லர். ராகுல் திவேதியா, ஜாசன் ஹோல்டர். வாஷிங்டன் சுந்தர், ரஷித் கான், முகமது சிராஜ், ககிசோ ரபடா, அர்ஷத் கான், சாய் கிஷோர்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.