ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் பெங்களூரு அணி, பஞ்சாப்பை இன்று சந்திக்கிறது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறை. எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும்.
லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். 'பிளே-ஆப் சுற்றை எட்டுவதற்கு 8-9 வெற்றிகள் தேவையாகும். இன்னும் எந்த அணியும் 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்யவில்லை.
இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 61-வது லீக் பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி (குஜராத், சென்னை, ஐதராபாத், மும்பை, லக்னோ, டெல்லி அணிகளுக்கு எதிராக). ஒரு முடிவில்லை (கொல்கத்தாவுக்கு எதிராக), 5 தோல்வியுடன் (ராஜஸ்தான், குஜராத். ஐதராபாத். டெல்லி, மும்பை அணிகளுக்கு எதிராக) 13 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. முதல் 7 ஆட்டங்களில் தோல்வி பக்கமே போகாத அந்த அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோற்று துவண்டு போய் இருக்கிறது.
இந்த சீசனில் 265 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து சாதனை படைத்த அந்த அணி பந்து வீச்சு பலவீனம் காரணமாக 7 முறை 200 ரன்களுக்கு மேலாக ரன்களை விட்டுக்கொடுத்துள்ளது. பந்து வீச்சு பிரச்சினைக்கு தீர்வு கண்டு சரிவில் இருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கும் அந்த அணி எஞ்சிய இரண்டு ஆட்டங்களிலும் ஜெயித்தால் தான் 'பிளே-ஆப்' வாய்ப்பில் நீடிக்க முடியும்.
பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங் (5 அரைசதத்துடன் 439 ரன்கள்), கூப்பர் கனோலி (ஒரு சதம், 2 அரைசதத்துடன் 436), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (5 அரைசதத்துடன் 396), பிரி யான்ஷ் ஆர்யா (3 அரைசதத்துடன் 364) நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் ஓரளவு கைகொடுக்கின்றனர். சேவியர் பார்லெட் ஏற்றம் காண வேண்டியது அவ சியமானதாகும்.
பெங்களூரு அணி 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி (ஐதராபாத், சென்னை, 2 முறை மும்பை, லக்னோ. குஜராத், டெல்லி, கொல்கத்தா அணிகளுக்கு எதிராக) 4 தோல்வி கண்டு (ராஜஸ்தான், டெல்லி, குஜராத், லக்னோ அணிகளுக்கு எதிராக) 16 புள்ளிகள் குவித்துள்ளது. அந்த அணி தனது எஞ்சிய இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் வென்றாலே அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விடும்.
பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி (ஒரு சதம். 3 அரைசதத்துடன் 484 ரன்கள்), தேவ்தத் படிக்கல் (3 அரைசதத்துடன் 367), கேப்டன் ரஜத் படிதார் (3 அரைசதத்துடன் 337), டிம் டேவிட் (234) சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் (22 விக்கெட்), ஹேசில்வுட். குருணல் பாண்ட்யா, ராசிக் சலாம் கலக்குகிறார்கள்.
பெங்களூரு அணி உத்வேகத்தை தொடர்ந்து அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைய தனது முழுபலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் சரிவில் இருந்து மீண்டு அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க பஞ்சாப் அணி கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இவ்விரு அணிகளும் 37 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் பெங்களூருவும், 18-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா. பிரப்சிம்ரன் சிங், கூப்பர் கனோலி, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்). சூர்யான்ஷ் ஷெட்கே, ஷசாங் சிங், அஸ்மத்துல்லா ஒமர் ஜாய், மார்கோ யான்சென், விஷ்ணு வினோத். சேவியர் பார்லெட். அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
பெங்களூரு: ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), டிம் டேவிட், ஜிதேஷ் ஷர்மா, வெங்கடேஷ் அய்யர். குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார். ராசிக் சலாம், ஹேசில்வுட், ஜேக்கப் டப்பி.