விளையாட்டு

IPL 2026 | ராஜஸ்தானின் வீறுநடைக்கு முட்டுக்கட்டை போடுமா பெங்களூரு? - இன்று பலப்பரீட்சை

நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத இவ்விரு அணிகளும் உத்வேகத்தை தொடர்வதுடன் முதலிடத்தை மனதில் வைத்தும் வரிந்துகட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இதில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

ராஜஸ்தான் அணி முதலாவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையையும், அடுத்த ஆட்டங்களில் 6 ரன் வித்தியாசத்தில் குஜராத்தையும், 27 ரன் வித்தியாசத்தில் மும்பையையும் அடுத்தடுத்து வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கவனத்தை ஈர்க்கிறார்கள். 24 வயது இடக்கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் (2 அரைசதம் உள்பட 170 ரன்), 15 வயது வைபவ் சூர்யவன்ஷி (ஒரு அரைசதம் உள்பட 122 ரன்) அச்சமின்றி அதிவேகமாக பேட்டை சுழற்றி எதிரணி பவுலர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றனர். இவர்கள் நிலைத்து நின்று விட்டால் பவுலர்களின் பாடு திண்டாட்டம் தான். துருவ் ஜூரெல், கேப்டன் ரியான் பராக்கும் வலுசேர்க்கின்றனர். பந்து வீச்சில் ரவி பிஷ்னோய், நன்ரே பர்கர், ஜோப்ரா ஆர்ச்சர், சந்தீப் ஷர்மா கலக்குகிறார்கள்.

பெங்களூரு அணி தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை அதட்டியது. அடுத்த ஆட்டத்தில் 43 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது. அந்த அணியின் டாப்-4 பேட்ஸ்மேன்களான பில் சால்ட், விராட் கோலி, தேவ் தத் படிக்கல், கேப்டன் ரஜத் படிதார் சூப்பர் பார்மில் உள்ள னர். தேவ்தத் படிக்கல் (111 ரன்) அடுத்தடுத்து இரு அரைசதம் அடித்திருக்கிறார். கடந்த ஆட்டத்தில் டிம் டேவிட் 25 பந்து களில் 70 ரன்கள் விளாசி அமர்க்களப்படுத்தினார். பந்து வீச்சில் ஜேக்கப் டப்பி, புவனேஷ்வர் குமார், குருணல் பாண்ட்யா, சுயாஷ் ஷர்மா பயனுள்ள பங்களிப்பை அளிக்கின்றனர்.

நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத இவ்விரு அணிகளும் உத்வேகத்தை தொடர்வதுடன் முதலிடத்தை மனதில் வைத்தும் வரிந்துகட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பெங்களூரு 17 ஆட்டத்திலும், ராஜஸ்தான் 14 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது.

கவுகாத்தியில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இங்கு நடந்த இரு ஆட்டங்களிலும் ராஜஸ்தான் வெற்றி பெற்றிருப்பதால் கூடுதல் நம்பிக்கையோடு இறங்குவார்கள்.