ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சுடன் மல்லுக்கட்டுகிறது.
குஜராத் அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி (டெல்லி, லக்னோ, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு அணிகளுக்கு எதிராக), 4 தோல்வி (பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை, பெங்களூரு அணிகளுக்கு எதிராக) கண்டு 5-வது இடத்தில் இருக்கிறது.
குஜராத் அணியில் பேட்டிங்கில் கேப்டன் சுப்மன் கில் (3 அரைசதத்துடன் 373 ரன்கள்), சாய் சுதர்சன் (ஒரு சதம், 2 அரைசதத் துடன் 328), ஜோஸ் பட்லர் (2 அரைசதத்துடன் 309) சிறப்பாக செயல்படுகிறார்கள். பந்து வீச்சில் ககிசோ ரபடா (14 விக்கெட்), பிரசித் கிருஷ்ணா (12), ரஷித் கான் (10), முகமது சிராஜ் (9) மிரட்டக்கூடியவர்கள்.
பஞ்சாப் அணி 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி (குஜராத், சென்னை. ஐதராபாத், மும்பை. லக்னோ, டெல்லி அணிகளுக்கு எதிராக), ஒரு முடிவில்லை (கொல்கத்தாவுக்கு எதிராக), ஒரு தோல்வியுடன் (ராஜஸ்தானுக்கு எதிராக) முதலிடத்தில் உள்ளது. முதல் 7 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காத அந்த அணி ராஜஸ்தானுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 222 ரன்கள் குவித்தும் அதற்குள் எதிரணியை முடக்க முடியாமல் 6 விக்கெட் வித்தியாசத்தில் சறுக்கியது.
பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங் (4 அரைசதத்துடன் 346 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (4 அரைசதத்துடன் 309), பிரியான்ஷ் ஆர்யா (283), கூப்பர் கனோலி (270), மார்கஸ் ஸ்டோனிஸ் அசத்துகின்றனர். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், விஜய்குமார் வைஷாக், சேவியர் பார்லெட், மார்கோ யான்சென் வலுசேர்க்கின்றனர்.
பஞ்சாப்புக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க குஜராத்தும், தனது ஆதிக்கத்தை தொடர பஞ்சாப் அணியும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை சந்தித்ததில் பஞ்சாப் அணி 4-3 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.