ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை சந்திக்கிறது.
டெல்லி அணி 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி (லக்னோ, மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக), 7 தோல்வியுடன் (குஜராத், 2 முறை சென்னை, ஐதராபாத், பஞ்சாப், பெங்களூரு, கொல்கத்தா அணிகளுக்கு எதிராக) 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது. மீதமுள்ள 2 ஆட்டங்களில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவதுடன், அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே அந்த அணிக்கு அடுத்த சுற்று கதவு திறக்கும்.
டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (ஒரு சதம், 3 அரைசதத்துடன் 477 ரன்கள்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ். சமீர் ரிஸ்வி, நிதிஷ் ராணாவும், பந்து வீச்சில் கேப்டன் அக்ஷர் பட்டேல், இங்கிடி, மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவும் பலம் சேர்க்கின்றனர்.
ராஜஸ்தான் அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி (சென்னை, குஜராத், மும்பை, பெங்களூரு, லக்னோ, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக), 5 தோல்வி கண்டு (2 முறை ஐதராபாத், கொல்கத்தா, டெல்லி, குஜராத் அணிகளுக்கு எதிராக) 12 புள்ளிகள் எடுத்துள்ளது. முதல் 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்ற அந்த அணி அடுத்த 7 ஆட்டங்களில் 5-ல் தோற்றுள்ளது.
முந்தைய 2 ஆட்டங்களில் வீழ்ந்ததும் அடங்கும். அந்த அணி எஞ்சிய 3 ஆட்டங்களில் வென்றால் பிரச்சினையின்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இரண்டில் வென்றால் மற்ற ஆட்டங்களின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியது இருக்கும்.
ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் வைபவ் சூர்யவன்ஷி (ஒரு சதம். 2 அரைசதத்துடன் 440), ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல், டோனவன் பெரேராவும். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், பிரிஜேஷ் ஷர்மா, ரவீந்திர ஜடேஜாவும் வலுசேர்க்கின்றனர். தசைப்பிடிப்பு காரணமாக கடந்த ஆட்டத்தில் ஆடாத கேப்டன் ரியான் பராக் களம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பதால் டெல்லி அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்த ராஜஸ்தான் வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை சந்தித்து இருக்கின்றன. இதில் 16-ல் டெல்லியும். 15-ல் ராஜஸ்தா னும் வென்றுள்ளன.
போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.