விளையாட்டு

சரிவில் இருந்து மீண்டெழுமா சிஎஸ்கே? - டெல்லி அணியுடன் இன்று பலப்பரீட்சை

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிட்டல்சை எதிர்கொள்கிறது.

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணி 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். பிளே-ஆப் சுற்றை எட்ட குறைந்தது 8-9 வெற்றிகள் தேவையாகும்.

இந்த தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இரவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிட்டல்சை எதிர்கொள்கிறது.

5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனை போலவே இந்த முறையும் தகிடுதத்தம் போட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத சென்னை அணி தனது முதல் 3 ஆட்டங்களில் ராஜஸ்தான், பஞ்சாப், பெங்களூரு அணிகளிடம் உதை வாங்கி கடைசி இடத்தில் உள்ளது. இதில் கடைசி இரு ஆட்டங்களில் 200 ரன்களுக்கு மேல் குவித்தது மட்டுமே ஒரே ஆறுதலாகும்.

பேட்டிங்கில் ஆயுஷ் மாத்ரே, ஷிவம் துபே, சர்ப் ராஸ்கான் ஓரளவு கைகொடுத்தாலும் பந்து வீச்சு தான் ஒட்டுமொத்தமாக சொதப்புகிறது. எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி 3 ஆட்டத்தில் 2 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது இன்னும் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அதுதான் பலவீனமாக தெரிகிறது.

இதே போல் ராஜஸ்தான் அணியிடம் இருந்து வாங்கப்பட்ட சஞ்சு சாம்சன் 3 ஆட்டங்களில் முறையே 6, 7, 9 ரன் வீதமே எடுத்துள்ளார். அவரும் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். காயத்தில் இருந்து மீண்டு வரும் அதிரடி பேட்ஸ்மேன் டிவால்ட் பிரேவிஸ் அணிக்கு திரும்பினால் பேட்டிங் வலுவடையும். டோனி தீவிர பயிற்சி மேற்கொண்டாலும் இன்னும் முழு உடல்தகுதியை எட்டாததால் களம் இறங்க வாய்ப்பில்லை.

2022-ம் ஆண்டில் சென்னை அணி தனது முதல் 4 ஆட்டங்களில் வரிசையாக தோற்றது. அத்தகைய மோசமான நிலைக்கு செல்வதை தவிர்க்க இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி எழுச்சி பெறுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சூப்பர் பார்மில் இருக்கிறது. தனது முதல் இரு ஆட்டங்களில் லக்னோ, மும்பையை பந்தாடியது. குஜராத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் கடைசி 2 பந்தில் 2 ரன் எடுக்க முடியாமல் ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. சமீர் ரிஸ்வி, லோகேஷ் ராகுல், டிரிஸ் டான் ஸ்டப்ஸ், பதும் நிசாங்கா சிறப்பாக ஆடுகிறார்கள். பந்து வீச்சில் லுங்கி இங்கிடி, குல்தீப் யாதவ், முகேஷ்குமார், டி.நடராஜன் என தரம் வாய்ந்த பவுலர்களுக்கு பஞ்சமில்லை. கடந்த ஆட்டத்தில் கைவிரலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆடிய மிடில் வரிசை பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் இந்த ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான். மற்றபடி எல்லா வகையிலும் டெல்லி பலம் வாய்ந்ததாக திகழ்வதால் சென்னைக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

இவ்விரு அணிகளும் இதுவரை 31 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 19-ல் சென்னையும், 12-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன. சேப்பாக்கத்தில் இவ்விரு அணிகளும் மோதிய 10 ஆட்டங்களில் 7-ல் சென்னையும், 3-ல் டெல்லியும் வெற்றி கண்டுள்ளன.