விளையாட்டு

IPL 2026| பெங்களூரு அணிக்கு பதிலடி கொடுக்குமா குஜராத்? இன்று மோதல்

இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 4-ல் பெங்களூருவும், 3-ல் குஜராத்தும் வெற்றி பெற்று இருக்கின்றன.

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது.

குஜராத் அணி 8 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி (டெல்லி, லக்னோ, கொல்கத்தா, சென்னை அணிகளுக்கு எதிராக), 4 தோல்வி (பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை, பெங்களூரு அணிகளுக்கு எதிராக) கண்டுள்ளது. முந்தைய ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை பந்தாடிய உற்சாத்துடன் கால் பதிக்கிறது.

அந்த அணி பேட்டிங்கில் கேப்டன் சுப்மன் கில் (3 அரை சதத்துடன் 330 ரன்) சாய் சுதர்சன் (ஒரு சதம், 2 அரை சதத்துடன் 322) ஜோஸ் பட்லரையே (2 அரைசதத்துடன் 270) அதிகம் நம்பி இருக்கிறது. மிடில் ஆர்டரில் வாஷிங்டன் சுந்தர் (157) கைகொடுக்கிறார். ஷாருக்கான் (35) ராகுல் திவேதியா (49) பொறுப்புடன் ஆட வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் ககிசோ ரபடா (13விக்கெட்), பிரசித் கிருஷ்ணா (12), முகமது சிராஜ், ரஷித் கான், அசோக் ஷர்மா நம்பிக்கை அளிக்கின்றனர்.

பெங்களூரு அணி 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி (ஐதராபாத், சென்னை, மும்பை, லக்னோ, குஜராத், டெல்லி அணிகளுக்கு எதிராக), 2 தோல்வி (ராஜஸ்தான், டெல்லி அணிகளுக்கு எதிராக) அடைந்து வலுவான நிலையில் உள்ளது. அந்த அணி கடந்த ஆட்டத்தில் டெல்லியை 75 ரன்னில் சுருட்டியதுடன் 6.3 ஓவர்களில் அந்த இலக்கை எட்டிப்பிடித்து அசத்தியது.

பேட்டிங்கில் விராட் கோலி (3 அரைசதத்துடன் 351 ரன்கள்), தேவ்தத் படிக்கல் (3 அரைசதத்துடன் 242 ரன்), கேப்டன் ரஜத் படிதார் (2 அரைசதத்துடன் 238), டிம் டேவிட் (183) நல்ல நிலையில் உள்ளனர். காயத்தால் கடந்த 2 ஆட்டத்தை தவறவிட்ட தொடக்க வீரர் பில் சால்ட்டுக்கு பதிலாக வந்த ஜேக்கப் பெத்தேல் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. காயத்தில் இருந்து மீண்டு வரும் பில் சால்ட் உடல் கருகியை எட்டிவிட்டரா? என்பது உறுதி செய்யப்படவில்லை. பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் (14 விக்கெட்), ஹேசில்வுட், குருணல் பாண்ட்யா மிரட்டுகின்றனர்.

குஜராத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 206 ரன் இலக்கை விரட்டிபிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த பெங்களூரு அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அத்துடன் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற தீவிரம் காட்டும். அதேநேரத்தில் ஏற்கனவே அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க குஜராத் அணி கடுமையாக மல்லுக்கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 4-ல் பெங்களூருவும், 3-ல் குஜராத்தும் வெற்றி பெற்று இருக்கின்றன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், ஷாருக்கான், ஜாசன் ஹோல் டர், ராகுல் திவேதியா அல்லது கிளென் பிலிப்ஸ், ரஷித் கான், அர்ஷத் கான், ககிசோ ரபடா, முகமது சிராஜ், மானவ் சுதர்.

பெங்களூரு: ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, குருணல் பாண்ட்யா. புவனேஷ்வர் குமார். ஹேசில்வுட், ராசிக் சலாம், சுயாஷ் ஷர்மா,

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.