விளையாட்டு

IPL 2026 | 2-வது தகுதி சுற்று: குஜராத் - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

இன்று வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் மல்லுக்கட்டும்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் குஜராத்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட்

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 4 அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

இதில் தர்மசாலாவில் நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 92 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

நியூ சண்டிகாரில் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 47 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் தோற்று நடையை கட்டியது.

இந்தநிலையில் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று ஆட்டம் பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகாரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இதில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி கண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றி காணும் அணி, ஆமதாபாத்தில் நாளை மறுநாள் நடைபெறும் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் மல்லுக்கட்டும். தோல்வி அடையும் அணி வெளியேறும்.

குஜராத் அணி எப்படி?

2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் அணி லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வி என 18 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்தது. முதலாவது தகுதி சுற்றில் பெங்களூருவுக்கு எதிராக 255 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த அணி 162 ரன்னில் பணிந்தது.

குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன் (ஒரு சதம், 7 அரைசதத்துடன் 652 ரன்கள்), கேப்டன் சுப்மன் கில் (6 அரைசதத் துடன் 618), ஜோஸ் பட்லர் (4 அரைசதத்துடன் 498) ஆகியோரில் ஒருவர் நிலைத்து நின்று விட்டாலே ஸ்கோர் எகிறிவிடும். அதே நேரத்தில் இவர்கள் சீக்கிரம் வீழ்ந்தால் நிலைமை தலைகீழாகி விடும்.

முதலாவது தகுதி சுற்றில் அப்படி தான் நடந்தது. எனவே மிடில் வரிசையில் வாஷிங்டன் சுந்தர், நிஷாந்த் சிந்து, ஆல்-ரவுண்டர் ஹோல்டர், ராகுல் திவேதியா கைகொடுக்க வேண்டியது அவசியம். பந்து வீச்சில் ககிசோ ரபடா (26 விக்கெட்), ரஷித் கான் (19), முகமது சிராஜ் (17), பிரசித் கிருஷ்ணா. ஜாசன் ஹோல்டர் (தலா 15) நம்பிக்கை அளிக்கிறார்கள்.

சூர்யவன்ஷி

2008-ம் ஆண்டு சாம்பியனான ராஜஸ்தான் அணி லீக் சுற்றில் 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளிகள் எடுத்து 4-வது இடம் பெற்றது.

வெளியேற்றுதல் சுற்றில் முதலில் ஆடி 243 ரன்கள் குவித்த அந்த அணி. ஐதராபாத்தை 196 ரன்னில் முடக்கி 2-வது தகுதி சுற்றுக்கு ஏற்றம் பெற்றது.

ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி பட்டையை கிளப்புகிறார்.

அவர் இதுவரை ஒரு சதம், 4 அரைசதத்துடன் 680 ரன்கள் குவித்து இருப்பதுடன் ஐ.பி.எல். தொடரில் ஒரு சீசனில் அதிக சிக்சர் விளாசிய (65 சிக்சர்) வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். துருவ் ஜூரெல் (6 அரைசதத்துடன் 508), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (3 அரைசதத்துடன் 426).

கேப்டன் ரியான் பராக், டோனவன் பெரேரா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் (24 விக்கெட்). நன்ரே பர்கர், பிரிஜேஷ் ஷர்மா (தலா 13), ரவீந்திர ஜடேஜா (10) அசத்துகிறார்கள்.

நடப்பு சீசனில் ராஜஸ்தான் அணி 8 முறையும், குஜராத் 6 தடவையும் 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளன. அத்துடன் போட்டி நடைபெறும் நியூ சண்டிகாரில் இதுவரை நடந்த 5 ஆட்டங்களில் 7 இன்னிங்சில் 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டு இருக் கிறது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் ரசிகர்களுக்கு ரன் விருந்து காத்திருக்கிறது என்று சொல்லலாம்.

இந்த சீசனில் இவ்விரு அணிகளும் 2 முறை சந்தித்ததில் முதலாவது ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானும், இரண் டாவது ஆட்டத்தில் 77 ரன் வித்தியாசத்தில் குஜராத்தும் வெற்றி பெற்றுள்ளன. ஏறக்குறைய சமபலத்துடன் கோதாவில் குதிப்ப தால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இரவு 7.30 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகள் வருமாறு:-

குஜராத்: சாய் சுதர்சன். சுப்மன் கில் (கேப்டன்). ஜோஸ் பட்லர், நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், ஜாசன் ஹோல்டர், ராகுல் திவேதியா, ரஷித் கான், ககிசோ ரபடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் அல்லது மானவ்சுதர்.

ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி. துருவ் ஜூரெல். ரியான் பராக் (கேப்டன்), டோனவன் பெரேரா. தசுன் ஷனகா, ரவீந்திர ஜடேஜா, ஜோப்ரா ஆர்ச்சர், நன்ரே பர்கர், சுஷாந்த் மிஸ்ரா, பிரிஜேஷ் ஷர்மா, யாஷ் ராஜ் பஞ்சா.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.