விளையாட்டு

இந்திய ஹாக்கி வீரர் குர்ஜந்த் சிங் ஓய்வு அறிவிப்பு

குர்ஜந்த் சிங் இந்திய அணிக்காக 130 போட்டிகளில் விளையாடி 33 கோல்கள் அடித்துள்ளார். இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர்

ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய அணியில் இரண்டு முறை இடம் பிடித்திருந்த முன்கள வீரர் குர்ஜந்த் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று ஹாக்கி இந்தியா சார்பில் விருது வழங்கும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட குர்ஜந்த் சிங் சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 31 வயதான குர்ஜந்த் சிங் சுமார் 10 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

டோக்கியோவில் 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும், 2024-ல் பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியா வெண்கல பதக்கம் வென்றது. இந்தியா பதக்கம் வென்ற இந்த இரண்டு ஒலிம்பிக் போட்டியிலும் குர்ஜந்த் சிங் இடம் பிடித்திருந்தார். 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஹோங்சோயு ஆசிய போட்டியிலும், 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் இந்திய அணி தங்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

மத்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்துள்ளது. குர்ஜந்த் சிங் இந்திய அணிக்காக 130 போட்டிகளில் விளையாடி 33 கோல்கள் அடித்துள்ளார்.