விளையாட்டு

இந்திய பவுலர்கள் மோசமான பந்துவீச்சு...அதிருப்தியில் ரோகித் சர்மா!

குர்னூர் பிரார் மற்றும் பிரசித் கிருஷ்ணாவும் ஷார்ட் பிட்ச் மற்றும் புல்-டாஸ் பந்துகளை வீசி தொடர்ச்சியாக பவுண்டரிகளை விட்டுக்கொடுத்தனர்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், அனுபவமில்லாத இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் மோசமான பந்துவீச்சால் ரோகித் சர்மா களத்திலேயே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 2027 உலகக்கோப்பைக்கான முன் தயாரிப்பாக பார்க்கப்படும் இப்போட்டியில், முகமது சிராஜுக்கு ஓய்வளிக்கப்பட்டு, பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் குர்னூர் பிரார் அடங்கிய இளம் வேகப்பந்துவீச்சு கூட்டணியுடன் இந்தியா களமிறங்கியது.

போட்டியின் ஆரம்பம் முதலே இந்திய வேகப்பந்துவீச்சு தடுமாறியது. குறிப்பாக போட்டியின் 2வது ஓவரை வீசிய நிதிஷ் குமார் ரெட்டி, நோ-பால் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட ஒரே ஓவரில் 17 ரன்களை வாரி வழங்கினார். இதன் காரணமாக அவருக்கு மீண்டும் பந்துவீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொடர்ந்து வந்த குர்னூர் பிரார் மற்றும் பிரசித் கிருஷ்ணாவும் ஷார்ட் பிட்ச் மற்றும் புல்-டாஸ் பந்துகளை வீசி தொடர்ச்சியாக பவுண்டரிகளை விட்டுக்கொடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜான் காம்பெல் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் இருவருமே அரைசதம் கடந்து, முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்து இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

அதிருப்தியில் ரோகித் சர்மா

கட்டுப்பாடற்ற பந்துவீச்சு மற்றும் தவறான லென்த்களில் பந்துகளை வீசிய இளம் பவுலர்களின் செயல்பாட்டைக் கண்டு, களத்தில் இருந்த முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா வெளிப்படையாகவே கடுப்பாகி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். பகுதி நேரப் பந்துவீச்சாளர்கள் போல தொடக்க ஓவர்களை வீசிய இந்த பந்துவீச்சு முறை இந்திய ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது. வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் ரன்களை வாரி வழங்கிய நிலையில், இந்திய அணிக்கு ஒரே நம்பிக்கையாக உருவெடுத்தார் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்.

சிறப்பான கூக்ளி மற்றும் வேரியேஷன் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்த குல்தீப் யாதவ், அடுத்தடுத்து விக்கெட்டுகளை சரித்தார். ஒரு கட்டத்தில் 192 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற வலுவான நிலையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை, குல்தீப் தனது தொடர்ச்சியான விக்கெட் வேட்டையால் 198 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என நிலைதடுமாற வைத்தார். 10 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, போட்டியில் இந்தியாவை மீண்டும் வலுவான நிலைக்கு கொண்டு வந்தார்.

SCROLL FOR NEXT