விளையாட்டு

உலக கோப்பை ஹாக்கி: இந்திய பெண்கள் அணி நெதர்லாந்துடன் இன்று மோதல்

முதல் சுற்றில் மோதிய அணியுடன் மீண்டும் மோத தேவையில்லை.

16- வது உலக கோப்பை ஹாக்கி போட்டி பெல்ஜியத்தில் உள்ள வேவ்ரே, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் ஆகிய 2 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்திய பெண்கள் அணி

சலிமா டெட்டே தலைமையிலான இந்திய பெண்கள் அணியும் டி பிரிவில் இடம் பெற்று இருந்தது. சீனா இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இருந்தன.

இந்திய மகளிர் அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. இதன் மூலம் 5 புள்ளிகளுடன் இரண்டா வது இடத்தை பிடித்து 2- வது சுற்றுக்கு முன்னேறியது.

இந்த பிரிவில் சீனா 7 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. இங்கிலாந்து 4 புள்ளிகளும், தென் ஆப்பிரிக்கா புள்ளிகள் எதுவும் பெறாமலும் வாய்ப்பை இழந்தன. 9 முதல் 16 இடங்களுக்கான போட்டியில் அவைகள் விளையாடும்.

நெதர்லாந்துடன் இன்று மோதல்

2-வது சுற்றில் இந்திய அணி இ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதேபோல சீனாவும், ஏ பிரிவில் முதல் இடத்தை பிடித்த நெதர்லாந்து, 2- வது இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா அணிகளும் அதில் உள்ளன.

இதில் ஒவ்வொரு அணிக்கும் 2 ஆட்டம் இருக்கும். முதல் சுற்றில் மோதிய அணியுடன் மீண்டும் மோத தேவையில்லை. அதன் முடிவு கணக்கிடப்படும். அதன்படி நெதர்லாந்து 3 புள்ளிகளுடனும், இந்தியா, சீனா தலா ஒரு புள்ளிகளுடனும் 2-வது சுற்றில் விளையாடுகிறது. இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

சலிமா டெட்டே தலைமையிலான இந்திய பெண்கள் அணி இன்று இரவு 9.30 மணிக்கு நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. அரை இறுதி வாய்ப்பில் நீடிக்க இதில் வெற்றி பெறுவது அவசியமாகும்.

இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலி வை 23- ந் தேதி (இரவு 10.30) சந்திக்கிறது.

ஆண்கள் அணி

ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் அணி 2-வது சுற்றில் இ பிரிவில் உள்ளது.‌ இங்கிலாந்து ஏ பிரிவில் முதல் இடத்தை பிடித்த நெதர்லாந்து, 2-வது இடத்தை பிடித்த அர்ஜெ ன்டினா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

இங்கிலாந்து, நெதர்லாந்து தலா 3 புள்ளிகளுடன் 2- வது சுற்றில் விளையாடும். இந்திய அணி முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தை நாளை (22- ந் தேதி) இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறது.

அடுத்த போட்டியில் அர்ஜென்டினாவை 24-ந் தேதி மாலை 6.15 மணிக்கு எதிர்கொள்கிறது. நேற்று ஏ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டங்களில் அர்ஜென்டினா 7-1 என்ற கணக்கில் நியூசிலாந்தையும், நெதர் லாந்து 4-1 என்ற கணக்கில் ஜப்பானையும் வீழ்த்தின.