இலங்கை XI அணிக்கு எதிரான 3 நாட்கள் கொண்ட பயிற்சி கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் மூலம், ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கவுள்ள டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி ஆக.15ம், இரண்டாவது போட்டி ஆக.23ம் நடைபெற உள்ளன. இதற்கு முன்னதாக பயிற்சிப் போட்டிகள் கடந்த 7ம் தேதி தொடங்கின.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 363 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 357 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இந்திய அணியைக் காட்டிலும் 6 ரன்கள் என்ற முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்திருக்கையில் டிக்ளேர் செய்தது.
இதனைத்தொடர்ந்து 207 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியுள்ளது.