ஆசிய விளையாட்டு போட்டியின் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியது.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் தடகளத்தில் தான் அதிகபட்சமாக 75 பேர் (35 வீரர்கள், 40 வீராங்கனைகள்) பங்கேற்று உள்ளனர்.
இன்று காலை 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தின் தகுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பூவம்மா மாச்செட்டிரா, விஷால் தென்னரசு, டிஎஸ்.மனு மற்றும் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் இந்திய ஜோடி 3 நிமிடம் 16.23 வினாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்தது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டிக்கு முன்னேறிய 8 அணிகளில் இந்திய அணி 4-வது நிலையில் உள்ளது. பஹ்ரைன், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகள் இந்தியாவை விட பந்தய தூரத்தை கடந்ததில் முன்னிலையில் இருந்தன.
இந்நிலையில், இன்று மாலை இறுதிப்போட்டி நடைபெற்றது. ஓட்டப்பந்தயத்தின் தொடக்கத்தில் பின்தங்கியிருந்த இந்திய அணியை, கடைசிச் சுற்றில் ஓடிய வித்யா ராம்ராஜ் தனது அசுர வேகத்தால் முன்னிலைக்குக் கொண்டு வந்தார்.
வியட்நாம் வீராங்கனையின் சவாலை முறியடித்து தனது முழு மூச்சையும் கொடுத்து சீறிப்பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்.
இந்திய அணி பந்தய தூரத்தை 3:14.46 நிமிடங்களில் கடந்து 2-வது இடம் பிடித்தது. பஹ்ரைன் அணி 3:12.87 நிமிடங்களில் கடந்து தங்கப் பதக்கம் வென்றது. வியட்நாம் அணி 3:14.54 நிமிடங்களில் இலக்கை எட்டி வெண்கலம் வென்றது.
ஏற்கனவே, 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் சீமா குமாரி வெண்கலம் வென்றார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 1 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலம் என 17 பதக்கங்களைப் பெற்றுள்ளது.