5-வது ஆசிய பாரா விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி-நகோயா நகரில் நடைபெற்று வருகிறது. 24-ந் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் 168 பேர் (ஆண்கள் 112, பெண்கள் 56) பங்கேற்றுள்ளனர்.
2- வது நாள் போட்டி முடிவில் இந்தியா 9 தங்கம், 11 வெள்ளி , 15 வெண்கலம் ஆக மொத்தம் 35 பதக்கம் பெற்று இருந்தது. நேற்று ஒரே நாளில் 24 பதக்கம் கிடைத்தது.
நிஷாத் குமார் இரட்டை தங்கம் (நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் டி 47) வென்றார்.
மோனா அகர்–வால் (துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1), சவுமியா குமார் (1500 மீட்டர் ஓட்டம் டி 12-13), ரிங்கு ஹூடா, (ஈட்டி எறிதல் எப் 46), தீப்தி ஜூவன்ஜி (400 மீட்டர் ஓட்டம் டி 20), பிரனவ் சூர்மா, தேவேந்தர் குமார் (வட்டு எறிதல் எப் 51-53 மற்றும் எப் 43/44/62/64/), சிம்ரன் சர்மா (200 மீட்டர் ஓட்டம் டி 12) ஆகியோரும் தங்கம் வென்றனர்.
3-வது நாளான இன்று காலை இந்தியாவுக்கு மேலும் 3 தங்கம் கிடைத்தது. அதோடு மேலும் 6 வெள்ளி, 3 வெண்கலம் கிடைத்தது.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் (டி64) பிரவீன் குமார் தங்கம் வென்றார். அவர் 2.05 மீட்டர் தாண்டினார். இது புதிய ஆசிய விளையாட்டு சாதனையாகும்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த 23 வயதான பிரவீன்குமார் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும், பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும் பெற்றார்.
கடந்த பாரா ஆசிய விளையாட்டிலும் அவர் தங்கம் வென்று இருந்தார். தற்போது மீண்டும் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரரான பண்டி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். அவர் 1.92 மீட்டர் தாண்டினார்.
ஆண்களுக்கான குண்டு எறிதலில் என்.எப்.53 பிரிவில் ஆயுஷ் வர்மா இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்தார். அவர் தனது 5-வது முயற்சியில் 8.16 மீட்டர் தூரம் வீசினார். இதுவே முதல் இடத்தை பிடிக்க காரணமாக அமைந்தது.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த 25 வயதான அவர் இந்த தொடரில் கைப்பற்றிய 2-வது பதக்கமாகும். நேற்று நடைபெற்ற ஈட்டி எறிதலில் (எப்53/54) அவர் வெண்கல பதக்கம் கைப்பற்றி இருந்தார்.
ஆண்களுக்கான குண்டு எறிதல் எப்46 பிரிவில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கமும் கிடைத்தது.
சச்சின் கிலாரி 15.87 மீட்டர் தூரம் எறிந்து புதிய பாரா ஆசிய விளையாட்டு சாதனையுடன் தங்கம் வென்றார். இதற்கு முன்பு 15.67 மீட்டர் தூரம் எறிந்ததே சாதனையாக இருந்தது.
36 வயதான சச்சின் கிலாரி மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். 2024 பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். கடந்த ஆசிய பாரா விளையாட்டிலும் அவர் தங்கம் வென்று இருந்தார். தற்போது மீண்டும் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி சாதித்து உள்ளார்.
முகமது யாசர் 15.06 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும், பிரவீன் 14.94 மீட்டர் தூரம் எறிந்து வெண்கல பதக்கமும் பெற்றார்.
பெண்களுக்கான குண்டு எறிதல் எப்34 பிரிவில் பாக்யஸ்ரீ யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் 8.19 மீட்டர் தூரம் எறிந்தார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்.12/13 பிரிவில் மஞ்சித் வியாஸ் 61.41 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.
வில்வித்தை காம்பவுண்ட் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஷீத்தல் தேவி-பயல்நத் ஜோடிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இந்த ஜோடி இறுதிப் போட்டியில் 141-150 என்ற கணக்கில் சீனா ஜோடியிடம் தோற்றது.
பளு தூக்கும் போட்டியில் தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி 67 கிலோ பிரிவில் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். அவர் 3-வது முயற்சியில் அதிகபட்சமாக 108 கிலோ தூக்கினார்.
ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் டி35 பிரிவில் அனுபவ் சவுத்ரி, 100 மீட்டர் ஓட்டம் டி37 பிரிவில் ராகேஷ்பாய்பட் ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்றனர்.
இன்று காலை நிலவரப்படி இந்தியா 12 தங்கம், 17 வெள்ளி, 18 வெண்கலம் ஆக மொத்தம் 47 பதக்கம் பெற்று பதக்கப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.