ஆசிய விளையாட்டு கபடி போட்டியில் பெண்கள் அணியைத் தொடர்ந்து, இந்திய ஆண்கள் அணியும் தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.
ஆசிய விளையாட்டில் கபடி போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
சுனில்குமார் தலைமையிலான இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஜப்பான், தென் கொரியா, வங்கதேசம், சீன தைபே அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன. ‘பி’ பிரிவில் ஈரான், பாகிஸ்தான், மலேசியா, நேபாளம், தாய்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜப்பானை 49-24 என்ற கணக்கிலும், 2-வது போட்டியில் 63-31 என்ற கணக்கில் தென் கொரியாவையும், 3-வது ஆட்டத்தில் வங்கதேசத்தை 48-25 என்ற புள்ளிக்கணக்கிலும் வீழ்த்தி இருந்தது. கடைசி லீக் ஆட்டத்தில் சீன தைபேயை 37-21 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் தாய்லாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி ஈரானுடன் மோதியது. ஆரம்பம் முதலே இரு அணிகளும் கடுமையாகப் போராடின.
இறுதியில், இந்திய ஆண்கள் அணி 39-35 என்ற புள்ளிக்கணக்கில் ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
கடந்த முறை நடந்த ஆசிய விளையாட்டிலும் கபடியில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்றிருந்தது.
முன்னதாக, இந்திய பெண்கள் அணியும் கபடிப் போட்டியில் தங்கம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு இன்று 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கம் கிடைத்துள்ளது.