விளையாட்டு

நாளை 2-வது போட்டி: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றுமா?

முதல் டெஸ்டில் 720 ரன் குவித்தும் வெற்றி பெற முடியாமல் போனது துரதிர்ஷ்டமே.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2 மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட் சர்ச் மைதானத்தில் நாளை ( வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இந்தியா தொடரை வெல்லுமா?

இரு அணிகள் இடையே வெல்லிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். இதனால் சுப்மன் கில் தலைமையிலான அணி இந்த டெஸ்டில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இந்திய அணி ஏற்கனவே வென்று இருந்தது.

வெற்றி பெற முடியாவிட்டாலும் டிரா செய்தாலே டெஸ்ட் தொடர் சமநிலையில் முடியும். இதனால் மிகவும் கவனமுடன் செயல் பட வேண்டும்.

வலுவான பேட்டிங்

முதல் டெஸ்டில் 720 ரன் குவித்தும் வெற்றி பெற முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. நியூசிலாந்தின் 6-வது விக்கெட்டான மிச்சேல் - பிலிப்ஸ் ஜோடி கடுமையாக போராடி இந்தியாவின் வெற்றியை தடுத்தது.

அணியின் பேட்டிங் வலுவாக இருக்கிறது. கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் சதத்தையும், கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் ஆகியோர் அரை சதத்தையும் பதிவு செய்தனர்.

வெல்லிங்டன் போட்டியில் விளையாடிய அதே பேட்டிங் வரிசையில் நாளையும் களம் இறங்கும்.

முகமது சிராஜ்

ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சு 2-வது இன்னிங்சில் மிகுந்த ஏமாற்றம் அளித்தது. 20 விக்கெட்டுகளை வீழ்த்தும் அளவுக்கு பந்துவீச்சு துறை இல்லை. இதனால் அணியில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் முதல் டெஸ்டில் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறாதது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர் பார்ப்பு இருக்கிறது.

ஒரு வேளை அவர் தேர்வு பெற்றால் அன்சுல் கம்போஜ் நீக்கப்படலாம். இதே போல வாஷிங்டன் சுந்தர் இடத்தில் ஜடேஜா வாய்ப்பை பெறுவாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இதே அணியே போதும் என்று நிர்வாகம் கருதினால் எந்த மாற்றமும் இருக்காது.

நியூசிலாந்து

20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் இழந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடரைகைப் பற்ற இந்திய அணியை வீழ்த்த போராடும்.

டாம் லாதம் தலைமையிலான அந்த அணியின் பேட்டிங் கில் ஹென்றி நிக்கோல்ஸ், பிலிப்ஸ், கான்வே, மிச்சேல் ஆகியோரும் பந்து வீச்சில் ஹென்றி, ஜேக்கப் டபி, ஜேமிசன், ரவீந்திரா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

இரு அணிகளும் 66 டெஸ்டில் மோதி உள்ளனர். இதில் இந்தியா 22-ல், நியூசிலாந்து 16-ல் வெற்றி பெற்றுள்ளன. 28 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

அதிகாலை 3.30 மணி

இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT