விளையாட்டு

இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்!

முதல் குழந்தை பிறந்த பிறகு நட்சத்திர வீராங்கனை டானி வியாட் அணிக்கு திரும்பி இருக்கிறார்.

10-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி முதல் ஜூலை 5-ந் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது.

இதற்கு தயாராகும் பொருட்டு ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந் திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.

இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செம்ஸ்போர்டுவில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

சமீபத்தில் இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடர்களை வென்ற இந்திய அணி கடந்த மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்து ஏமாற்றம் அளித்தது. அந்த தொடரில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒட்டு மொத்தமாக சொதப்பியது.

எனவே தங்களது குறைகளை சரி செய்து இந்திய அணி மீண்டும் எழுச்சி பெற முயற்சிக்கும். கடந்த ஆண்டு நடந்த இங்கிலாந்து தொடரை (3-2) முதல்முறையாக கைப்பற்றிய இந்திய அணி நம்பிக்கையுடன் களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.

இங்கிலாந்து அணி, நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வென்ற கையோடு இந்த போட்டியில் கால் பதிக்கிறது. வழக்கமான கேப்டன் நாட் சிவெர் காயத்தில் இருந்து மீளாததால் ஆடவில்லை. இதனால் சார்லி டீன் அணியை வழிநடத்துவார் என்று தெரிகிறது.

முதல் குழந்தை பிறந்த பிறகு நட்சத்திர வீராங்கனை டானி வியாட் அணிக்கு திரும்பி இருக்கிறார். இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.