மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா, மலேசியாவை 6-2 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் தீபிகா இரண்டு கோல்களை அடித்தார்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, தனது தாக்குதல் ஆட்டத்தின் வலிமையையும் பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்தியது. மும்தாஸ் கான் (10-ஆவது நிமிடம்), நவநீத் கவுர் (18-ஆவது நிமிடம்), தொடரின் அதிக கோல் அடித்த வீராங்கனையான தீபிகா (25 மற்றும் 30-ஆவது நிமிடங்கள்), சுனேலிதா டோப்போ (33-ஆவது நிமிடம்) மற்றும் இஷிகா (57-ஆவது நிமிடம்) ஆகியோர் கோல்களை அடித்தனர்.
மலேசியா தரப்பில் நூர் அசார் (27-ஆவது நிமிடம்) மற்றும் நூராமிரா ஜுல்கிஃப்லி (52-ஆவது நிமிடம்) ஆகியோர் கோல்களை பதிவு செய்தனர். இதன் மூலம், இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா ஆறாவது முறையாக தகுதி பெற்றுள்ளது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்தியா ஆதிக்கம் செலுத்த முயன்றது. மத்திய களத்தில் பந்தை நேர்த்தியாக கடத்தி ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தது. அதே சமயம், மலேசிய அணி தற்காப்பு ஆட்டத்தில் கவனமாக செயல்பட்டு, இந்திய அணியின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியது.
முதல் பாதியின் பிற்பகுதியில், இந்திய அணி மலேசியாவின் தற்காப்பு அரணை ஊடுருவ தொடங்கியது. அப்போது சுனேலிதா ஒரு பெனால்டி கார்னரை பெற்று தந்தார். தீபிகா எடுத்த முதல் முயற்சி கோலாக மாறவில்லை என்றாலும், சுனேலிதா சமயோசிதமாக செயல்பட்டு பந்தை மும்தாஸிடம் வழங்க, அவர் மிக அருகில் இருந்து கோல் அடித்தார்.
இரண்டாவது பாதியில் இந்திய அணியின் தாக்குதல் வேகம் அதிகரித்தது. 18-ஆவது நிமிடத்தில், நவநீத் கவுர் தனித்திறமையால் மலேசியாவின் இரு தற்காப்பு வீரர்களை கடந்து சென்று, கோல்கீப்பரையும் ஏமாற்றி கோல் அடித்தார்.
தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள், மலேசியாவின் தற்காப்பு அரணை திணறடித்தனர். பின்னர், கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட தீபிகா, பந்தை கோல் கம்பத்தின் இடது கீழ் மூலையில் செலுத்தி இந்தியாவின் முன்னிலையை மேலும் உயர்த்தினார்.