விளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டு: இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்

இந்தியா சார்பில் 126 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது.

23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. ஆகஸ்ட் 2-ம் தேதி வரை 11 நாட்கள் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

மொத்தம் 74 நாடுகள்

இதில் காமன்வெல்த் கூட்டமைப்பில் இருக்கும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்பட 74 நாடுகளில் இருந்து 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர் .

தடகளம், பளு தூக்குதல், குத்துச்சண்டை, நீச்சல், கூடைப்பந்து (3x3), ஜிம்னாஸ்டிக் (ஆர்ஸ்டிக்), சைக்கிளிங், ஜூடோ, நெட் பால், பவுல்ஸ் வலு தூக்குதல் (பாரா பிரிவினருக்கு மட்டும்) ஆகிய 11 விளையாட்டுகள் 215 பிரிவுகளில் நடைபெறுகிறது. இதில் 6 விளையாட்டுகள் பாரா பிரிவினருக்கு நடத்தப்படுகிறது.

தேசிய கொடி

இதில் இந்தியா சார்பில் 126 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இதில் 78 பேர் வீரர்கள், 48 வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள். 8 விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள். 5 பாரா விளையாட்டுகளில் கலந்துகொள்கிறார்கள்.

பிரமாண்டமாக நடைபெற்ற தொடக்க விழாவில் தேசிய கொடியை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா ஆகியோர் ஏந்திச்சென்றனர். இன்று முதல் போட்டிகள் ஆரம்பமாகிறது.

இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகளின் விவரம் வருமாறு:

ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் (பிற்பகல் 2:30) - ஆண்கள் அணிகள் பிரிவு இறுதிப் போட்டி மற்றும் தனிநபர் தகுதிச்சுற்று நடக்கிறது. இதில் தபன் மொஹந்தி, சுவாதிஷ் தபேஷ்வர்நாத் தாஸ், யோகேஷ்வர் சிங் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

நீச்சல் மற்றும் பாரா நீச்சல் (பிற்பகல் 3.40) ஆண்கள் 100மீ ப்ரீஸ்டைல் தகுதிச்சுற்றில் ரவி வீரா வெங்கட பவானி கார்த்திக் புடிகனா, ஆண்கள் 100மீ ப்ரீஸ்டைல் தகுதிச்சுற்றில் இமாம் அலி. ஆண்கள் 50மீ பேக்ஸ்ட்ரோக் தகுதிச்சுற்றில் ஸ்ரீஹரி நடராஜ் ஆகியோா களம் காணுகிறார்கள்.

பாரா வலு தூக்குதலில் மாலை 5.40 மணிக்கு ஆண்கள் லைட்வெயிட் இறுதிப்போட்டியில் அசோக், பரம்ஜீத் குமார் ஆகியோரும், மாலை 7:24 மணிக்கு பெண்கள் லைட்வெயிட் இறுதிப்போட்டியில் ஜஸ்பிரீத் கவுர், சுமன் தேவி ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

லான் பவுல்ஸ் போட்டியில் இரவு 7:30 மணிக்கு நடக்கும் பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் பிங்கி-ரூபா ராணி டிர்கி ஜோடி தென் ஆப்பிரிக்காவின் தபெலோ முவாங்கோ-ஜாக்கி ஜான்ஸ் வான் ரென்ஸ் பர்க் ஜோடியுடன் மோதுகிறது. இரவு 10.20 மணிக்கு நடக்கும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டதில் இந்தியாவின் புதுல் சோனோவால்-பாக்லாந்து தீவை சேர்ந்த செசில் அலெக்சாண்டர் மோதுகிறார்கள்.

பாரா வலு தூக்குதலில் இரவு 10:40 மணிக்கு பெண்களுக்கான ஹெவி வெயிட் பிரிவு இறுதிப்போட்டி நடக்கிறது. இதில் கஸ்தூரி ராஜாமணி பங்கேற்கிறார். அதிகாலை 12:29 மணிக்கு நடக்கும் ஆண்களுக்கான ஹெவி வெயிட் பிரிவு இறுதிப்போட்டியில் சுதிர், ஜந்து குமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

குத்துச்சண்டை

குத்துச்சண்டை போட்டியில் இரவு 11 மணிக்கு நடக்கும் ஆண்களுக்கான 55 கிலோ பிரிவு போட்டி ஒன்றில் இந்தியாவின் ஜடுமணி சிங், ஸ்காட்லாந்தின் ஆரோன் கல்லன் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.