இலங்கைக்கு எதிராக காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்த வெற்றி மூலம் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 23-ந் தேதி கொழும் பில் தொடங்குகிறது.
இந்த நிலையில் முதல் டெஸ்டில் பெற்ற வெற்றியால் இந்தியாவின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதால் மட்டும் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கூற மாட்டேன். ஏனெனில் ஒவ்வொரு டெஸ்ட் வெற்றியும் மிகவும் சிறப்பானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடுகிறோம். பல வீரர்கள் இதற்கு முன்பு இங்கு ஆடியது கிடையாது.
இந்த தொடருக்கு முன்னதாக கூறியதுபோல இந்திய அணி அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டதாக கருதுகிறேன். இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது.
முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இதே நம்பிக்கையுடன் 2-வது போட்டியில் விளையாட உள்ளோம். அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறோம் .
எனவே சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சூழலை புரிந்து கொண்டு பேட்ஸ்மேன் கள் சிறப்பாக ஆட வேண்டியுள்ளது. அதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
இந்த வெற்றி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடு களங்களிலும் எங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
இவ்வாறு கே.எல். ராகுல் கூறியுள்ளார்.
அவர் இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 82 ரன்னும், 2-வது இன்னிங்சில் 35 ரன்னும் எடுத்தார்.