இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குவதை யொட்டி இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:-
முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுகளம் பெருமளவில் மந்தமாக இருந்தது. இதனால் வேகப்பந்து வீச்சாளர்களின் வேகம் குறைந்து காணப்பட்டது. இதற்காக அன்சுல் கம்போஜை விமர்சிக்கக் கூடாது. அவருக்கு ஆதரவாக இருப்போம். அவர் சிறப்பாகவே செயல்பட்டார். வெளியில் இருந்து கணிப்பது மிகவும் கடினம்.
கம்போஜ் அணிக்காக மிகவும் கடுமையாக போராடினார். ஆடுகளத்தின் தன்மையால்தான் அவரது பந்துவீச்சில் வேகம் குறைந்தது. அனைத்து வேகப்பந்து வீரர்களும் உடல் தகுதியுடனும் விளையாட தயார் நிலையிலும் உள்ளனர்.
முகமது சிராஜ் நன்றாக பந்துவீசக் கூடியவர். சில சமயங்களில் முடிவுகள் கடினமாக இருக்கும். தேர்வு விஷயத்தை நம்மால் கட்டுப்படுத்த இயலாது. குர்னூர் பிரார் வாய்ப்புக்காக தயார் நிலையில் உள்ளார்.
அவரை 100 சதவீதம் தயாராக வைத்திருப்பதே எனது வேலை. இந்திய வீரர்கள் அனைவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட விரும்புகிறார்கள். ஒவ்வொரு பகுதி ஆட்டத்திலும் (செஷன்) சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
25 வயதான அரியானாவை சேர்ந்த அன்சுல் கம்போஜ் முதல் டெஸ்டில் 45 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார்.