விளையாட்டு

ஆசிய விளையாட்டு: ஒரே நாளில் 4 பதக்கம் வென்றது இந்தியா - 2 வெள்ளி, 2 வெண்கலம்

ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு ஒரே போட்டியில் 2 பதக்கங்கள் கிடைத்தன.

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி ஒரே நாளில் 4 பதக்கம் வென்றது. துப்பாக்கிச் சுடுதலில் 3 பதக்கமும், தற்காப்பு கலையில் ஒரு பதக்கமும் வென்றது.

ஹிமான்ஷு தில்லானுக்கு வெள்ளி

20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகிறது. இதில், நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஹிமான்ஷு வெள்ளி, ருத்ராங்க்ஸ் வெண்கலம் வென்று அசத்தினர்.

தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் ஹிமான்ஷு தில்லான், சீனாவின் ஷெங் உடன் மோதினார். இதில் ஷெங் 233.0 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். ஹிமான்ஷு தில்லான் 231.0 புள்ளிகளுடன்வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

ருத்ராங்க்ஸ் பாட்டீலுக்கு வெண்கலம்

இந்தியாவின் மற்றொரு வீரரான ருத்ராங்க்ஸ் பாட்டீல் இறுதிப்போட்டியில் 230.9 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். இதன்மூலம் அவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

அணிகள் பிரிவிலும் வெள்ளி

முன்னதாக நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவிலும் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ருத்ராங்க்ஸ் பாட்டீல், பார்த்த் மானே, ஹிமான்ஷு தில்லான் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1890.1 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்தது.

இந்நிலையில், நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் புதிதாகச் சோ்க்கப்பட்டுள்ள கலப்பு தற்காப்புக் கலைகளில் (எம்எம்ஏ) இந்தியாவின் சுச்சிகா தரியால் வெண்கலப் பதக்கம் வென்றாா்.

தற்காப்புக் கலையில் வெண்கலம்

மகளிருக்கான 60 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியிருந்த சுச்சிகா, சிங்கப்பூரின் ஹுய் ஹூன் தியோவை எதிா்கொண்டாா். மேல் முறையீட்டுக்கு பிறகு போட்டி ‘டிரா’ ஆனதாக அறிவித்தனா்.

போட்டி விதிகளின்படி ஆட்டம் சமனில் முடிந்தால், இரு போட்டியாளா்களில் எவா் எடை குறைவாக உள்ளாரோ அவருக்கே வெற்றி வழங்கப்படும் என்பதால், தியோ இறுதிப்போட்டிக்கு முன்னேறினாா். இதையடுத்து சுச்சிகா வெண்கலம் வென்றார்.

ஆசிய போட்டியின் வரலாற்றில் தற்காப்புக் கலையில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்றவா் என்ற பெருமை பெற்றார் சுச்சிகா.

இந்திய அணி இதுவரை 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கம் வென்று 12-வது இடத்தில் உள்ளது.

SCROLL FOR NEXT