மதிய உணவுக்குப் பதிலாக வெறும் டீ அல்லது பிஸ்கட் சாப்பிட்டுவிட்டு, அந்த பணத்தை சேமித்து வைத்து எனக்கு ஸ்பைக் ஷூ வாங்கித் தருவார்.
ஜப்பானில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் கோவையைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ், 3 போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
3 பதக்கங்கள்
வித்யா ராம்ராஜ், மகளிருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியின் இறுதிச்சுற்றின் இறுதிப் பகுதியில் அபாரமாக ஓடி தங்கம் வெல்லும் இந்தியாவின் கனவை நனவாக்கினார். மேலும் கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதுதவிர 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் இலக்கைக் கடந்து வெண்கலம் வென்றதுடன், ஜாம்பவான் பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையைத் தகர்த்தெறிந்தார்.
சாதனை படைத்த வித்யா ராம்ராஜூக்கு தமிழக முதலமைச்சர் விஜய் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ஜப்பானில் இருந்து நேற்று சென்னை திரும்பிய வித்யாராம்ராஜ் மற்றும் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வித்யா ராம்ராஜ் இன்று கோவை திரும்பினார். விமான நிலையத்தில் அவரது பெற்றோரும், உறவினர்களும், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சர் புஸ்சி ஆனந்த், வித்யா ராம்ராஜூக்கு சால்வை அணிவித்து அவரை வரவேற்று பாராட்டு தெரிவித்தார்.
தனது இமாலயச் சாதனைகளின் பின்னணியில் லாரி ஓட்டுநரான தனது தந்தை ராம்ராஜின் தியாகம் நிறைந்த உழைப்பு இருப்பதை வித்யா நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார். இதுதொடர்பாக வித்யா கூறியதாவது:-
கோவையில் இருந்து சென்று இந்தியாவுக்காக விளையாடி சாதனை படைத்திருப்பது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.
பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது ெரயில்வே துறையில் பணியாற்றி வருகிறேன். மத்திய மற்றும் மாநில அரசுகள் தனக்கு அளித்த ஆதரவால் இந்த நிலையை அடைந்துள்ளேன். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் தொடர்ந்து முழுமையான ஆதரவு அளித்து வருகிறார்.
கடந்த போட்டியைவிட இந்தப் போட்டியில் கடுமையாக உழைத்தேன். 2023-ம் ஆண்டிலிருந்து சாதனையை முறியடிக்கும் நோக்கத்துடன் பயிற்சி மேற்கொண்டேன். பதக்கத்தை இலக்காகக் கொள்ளாமல், நேரத்தை மேம்படுத்துவதே எனது முக்கிய நோக்கமாக இருந்தது. ஒரு விளையாட்டு வீரரின் வெற்றிக்குப் பின்னால் பயிற்சியாளர்களின் பங்களிப்பு முக்கியமானது ஆகும். விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் பயிற்சியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
இதுகுறித்து முதலமைச்சரிடமும் எடுத்துச் சென்றுள்ளோம். விளையாட்டு வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கும்போது பயிற்சியாளர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அடுத்ததாக ஒலிம்பிக் போட்டியை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். ஒலிம்பிக் போட்டியில் உலகின் முன்னணி வீராங்கனைகள் பலர் பங்கேற்பார்கள் என்பதால் அவர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்காக தயாராகி வருகிறேன்.
எங்கள் குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் மிகவும் கடினமாக இருந்தது. லாரி ஓட்டுநரான என் தந்தைக்கு பெரிய அளவில் வருமானம் கிடையாது. அப்போதெல்லாம் ஓடுவதற்கான ‘ஸ்பைக்’ ஷூக்கள் வாங்குவதே எங்கள் குடும்பத்துக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. 2009-ம் ஆண்டுகளில் ஒருவேளை உணவின் விலை ரூ.10 முதல் ரூ.40-ஆக இருந்தது. எனக்கு ஷூ வாங்கித் தருவதற்காக எனது அப்பா அவரது சாப்பாட்டை தவிர்ப்பார்.
மதிய உணவுக்குப் பதிலாக வெறும் டீ அல்லது பிஸ்கட் சாப்பிட்டுவிட்டு, அந்த பணத்தை சேமித்து வைத்து எனக்கு ஸ்பைக் ஷூ வாங்கித் தருவார். நானும் எனது சகோதரியும் நன்றாக ஓட வேண்டும் என்பதற்காகத்தன் பசியைப் பற்றிக் கவலைப்படாமல் அவர் செய்ததியாகம் கொஞ்சநஞ்சமல்ல” அன்று அவர் பட்டினி கிடந்து எங்களை உருவாக்கியதுதான் இன்று எங்கள் குடும்பத்துக்கு புதிய வெளிச்சத்தை கொடுத்துள்ளது. என் தந்தை செய்த தியாகத்துக்கு இன்று நாங்கள் அவருக்குக் கைமாறாக எங்களது வெற்றியைச் சமர்ப்பிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.