விளையாட்டு

குளோபல் சூப்பர் லீக்: யூனிகார்ன்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் பட்டத்தை வென்றது வாரியர்ஸ் அணி!

இம்ரான் தாஹீர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் மீண்டும் சாம்பியம் பட்டத்தை வென்றது.

குளோபல் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில், சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியை வெறும் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மீண்டும் பட்டத்தை தக்கவைத்தது அமேசான் வாரியர்ஸ் அணி.

பிராவிடன்ஸில் உள்ள கயானா தேசிய மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற நடப்பு சாம்பியனான வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, 18.5 ஓவர்களிலேயே 85 என்ற ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனைத்தொடர்ந்து விளையாடிய யூனிகார்ன்ஸ் அணி, 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி வாகையை சூடியது அமேசான் வாரியர்ஸ்.

கடந்த ஆண்டு ரங்க்பூர் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய வாரியர்ஸ் அணி, இந்தாண்டு யூனிகார்ன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.

குளோபல் சூப்பர் லீக்

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், கயானா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் பங்கேற்று விளையாடும் இந்த டி20 தொடரை மேற்குவங்க கிரிக்கெட் வாரியம் எடுத்து நடத்துகிறது.

லீக் சுற்றில் மொத்தம் 10 போட்டிகள் நடைபெறும். இதில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி இறுதிச்சுற்றுக்கு நேரடியாக தகுதிபெறும். இரண்டாம் மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கும் அணிகள் தகுதிச்சுற்றில் மோதும். இதில் வெற்றிப்பெறும் அணி இறுதிச்சுற்றில் பங்கேற்கும்.

நடப்பாண்டு தொடர் ஜூலை.23ம் தேதி தொடங்கியது. ஜூலை.31 தகுதிச்சுற்று நடைபெற்ற நிலையில், நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது.