ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. தடகளத்தில் இன்று ஆடவர்களுக்கான 100மீ தகுதிச் சுற்று ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. மொத்த 11 ஹீட் (பிரிவு) ஆக வீரர்கள் பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது.
இந்தியா சார்பில் குர்விந்தர்வீர் சிங் 100மீ ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டார். இவர் 4-வது ஹீட்டில் ஓடினார். இவருடன் மேலும் 6 பேர் ஓடினர். மொத்தமாக 7 பேர் ஓடியதில் ஜமைக்கா வீரர் ரோஹன் வாட்சன் 10.13 விநாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். இந்த வீரர் குர்விந்தர்வீர் சிங் 10.39 விநாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து 2-வது இடம் பிடித்தார்.
என்றபோதிலும், ஒட்டுமொத்தமாக அரையிறுதிக்கு 17 வீரர்கள்தான் தகுதி பெற முடியும். அந்த வகையில் குர்விந்தவீர் சிங் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தார். ஒட்டுமொத்தமாக குர்விந்தர்வீர் சிங் 28-வது இடத்தை பிடித்தார்.
கானா வீரர்கள் பெஞ்சமின் அசாமதி (10.00 விநாடி), அப்துல்-ரஷீத் சமினு (10.01 விநாடி) ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். இங்கிலாந்து வீரர் எலியட் ஜோன்ஸ் 10.07 விநாடிகளில் கடந்து 3-வது இடத்தை பிடித்தார்.
தற்போது வரை ஆஸ்திரேலியா 17 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களுடன் மொத்தமாக 39 பதக்கங்கள் வென்று முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 4 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 19 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
நைஜீரியா 4 தங்கம், 4 வெள்ளியுடன் மொத்தம் 8 பதக்கங்களுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 4 பதக்கங்கள் வென்று 8-வது இடத்தை பிடித்துள்ளது.
ஆடவர் நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்றில் முரளி ஸ்ரீஷங்கர், லோகேஷ் சத்யநாதன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
110மீ தடைதாண்டும் ஓட்டத்தில் தேஜாஸ் ஷிர்சே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
பெண்களுக்கான வெயிட்லிப்ட்டிங் 52 கிலோ எடைப்பிரிவில் ஞானேஷ்வரி யாதவ் கலந்து கொள்கிறார். இது பதக்கத்திற்கான போட்டியாகும். 58 கிலோ எடைப்பிரிவில் பந்தியாராணி தேவி கலந்து கொள்கிறார்.