இந்திய அணியில் பிளேயிங் லெவன் மற்றும் பேட்டிங் வரிசையில் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படுவதால், அணி தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் செயல்பாடு குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்திய அணியில் பிளேயிங் லெவன் மற்றும் பேட்டிங் வரிசையில் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படுவதால், அணி தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கவுதம் கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கோப்பைகளை வென்றுள்ளது. இருப்பினும், டெஸ்ட் போட்டிகள் மற்றும் இருதரப்பு தொடர்களில் அணியின் செயல்பாடு ஏற்ற இறக்கத்துடனும், சீரற்ற தன்மையுடனும் காணப்படுவதற்கு இந்தப் படபடப்பான மாற்றங்களே காரணம் என வாட்சன் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, உள்நாட்டில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்தியா தோல்வியைச் சந்தித்ததை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
பிரைம் வீடியோவின் யூடியூப் சேனல் விவாதம் ஒன்றில் பேசிய ஷேன் வாட்சன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு கம்பீர் அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவைப் பாராட்டியுள்ளார். அதேசமயம், அணியில் தொடர்ந்து வீரர்கள் உள்ளேயும் வெளியேயும் செல்வதும், பேட்டிங் வரிசை மாற்றி அமைக்கப்படுவதும் வீரர்களிடையே ஒருவித நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாகக் கூறியுள்ளார். சர்வதேச அளவில் ஒரு அணி சாதிக்கத் தேவையான ஸ்திரத்தன்மையும் தெளிவான பாத்திரமும் இருந்தால் மட்டுமே எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ முடியும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.