அக்ரா:
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி வருகிற ஜூன் 11-ந் தேதி முதல் ஜூலை 19-ந் தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் நடக்கிறது. 48 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை போட்டிக்கு 5-வது முறையாக தகுதி பெற்றுள்ள ஆப்பிரிக்க நாடான கானா அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஓட்டோ அடோ நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார்.
போட்டி தொடங்க இன்னும் 72 நாட்களே இருக்கும் நிலையில் அவருக்கு அந்த நாட்டு கால்பந்து சம்மேளனம் கல்தா கொடுத்துள்ளது. ஸ்டட்கர்ட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் கானா அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. அத்துடன் முந்தைய 3 ஆட்டங்களில் (ஆஸ்திரியா, தென்கொரியா, ஜப்பான் அணிகளுக்கு எதிராக) தோற்று இருந்தது. தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோல்வியை தழுவியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
50 வயது முன்னாள் வீரரான ஓட்டோ அடோ 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பயிற்சியாளராக இருந்து வந்தார். முன்னதாக 2022-ம் ஆண்டு சிறிது காலம் இடைக்கால பயிற்சியாளராகவும் இருந்தார்.
உலகக் கோப்பை போட்டியில் கானா அணி எல் பிரிவில் இடம் பிடித்துள்ளது. இங்கிலாந்து, குரோஷியா, பனாமா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். கானா அணி தனது முதலாவது ஆட்டத்தில் பனாமாவை ஜூன்17-ந் தேதி டொரோண்டோவில் எதிர் கொள்கிறது.