UEFA சாம்பியன்ஸ் லீக்கின் அரையிறுதி போட்டியின் முதல் லெக் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் பிஎஸ்ஜி (பிரான்ஸ் கிளப்)- பேயர்ன் முனிச் (ஜெர்மனி கிளப்) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி பிஎஸ்ஜி-க்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. இதில் பி.எஸ்.ஜி. 5-4 என வெற்றி பெற்றது.
ஆட்டம் தொடங்கிய 17-வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி ஹாரி கேன் கோல் அடித்தார்.
அடுத்த 7 நிமிடத்தில் (ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில்) பிஎஸ்ஜி அணியின் க்வாராட்ஸ்கெலியா கோல் அடித்தார். 33-வது நிமிடத்தில் அந்த அணியின் ஜொயாவோ நெவ்ஸ் கோல் அடித்தார். இதனால் பிஎஸ்ஜி 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.
41-வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் அணியின் மிக்கேல் ஒலிஸ் கோல் அடித்தார். பின்னர் பிஎஸ்ஜி அணிக்கு 45+5-வது நிமிடத்தில் பெனால்டி கிடைத்தது. இதை பயன்படுத்தி ஓஸ்மானே டெம்ப்ளே கோல் அடித்தார். இதனால் பிஎஸ்ஜி முதல் பாதி நேர ஆட்ட முடிவில் 3-2 என முன்னிலைப் பெற்றிருந்தது.
2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் 52-வது நிமிடத்தில் க்வாராட்ஸ்கெலியாவும், 58-வது நிமிடத்தில் டெம்ப்ளேவும் அடுத்தடுத்து கோல் அடிக்க பிஎஸ்ஜி 5-2 என முன்னிலைப் பெற்றிருந்தது. ஆனால், பேயர்ன் முனிச் வீரர்கள் அபாரமாக விளையாடினர். அந்த அணியின் உபாமெக்கானோ 65-வது நிமிடத்திலும், லூயிஸ் டயாஸ் 68-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்தனர். இதனால் பிஎஸ்ஜி 5-4 என ஒரு கோல் வித்தியாசத்தில் முன்னிலைப் பெற்றிருந்தது.
அதன்பின் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிஎஸ்ஜி 5-4 என வெற்றி பெற்றது. மே 7-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதில் பேயர்ன் முனிச் 2 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
மற்றொரு அரையிறுதி முதல் லெக் இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. இதில் அட்லெடிகோ மாட்ரிட்- அர்செனல் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.