மாலே:
8-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (20 வயதுக்கு உட்பட்டோர்) மாலத்தீவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 7 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள 4 முறை சாம்பியனான இந்திய அணி நேற்று நடந்த தனது முதலாவது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர் கொண்டது.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியது. இந்திய வீரர்கள் விஷால் யாதவ் (3-வது நிமிடம்). ஓமாங் டோடும் (64 மற்றும் 88-வது நிமி டம்) கோலடித்தனர். கடைசி வரை போராடியும் பாகிஸ்தான் அணியினரால் இந்திய தடுப்பு அரணை தகர்க்க முடியவில்லை.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரைஇறுதியை உறுதி செய்தது. 2-வது தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து இருந்த வங்காளதேச அணியும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, வங்கதேசத்தை (மாலை 4.15 மணி) சந்திக்கிறது.