கால்பந்து

ரியல் மேட்ரிட் தேர்தல் அதிரடி: ரூ. 1,350 கோடிக்கு 'கலாடிகோ' வீரரை வாங்க பெரெஸ் சபதம்!

"இந்த அறிவிப்பு ரியல் மாட்ரிட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது"

ரியல் மேட்ரிட் கிளப்பின் தலைவர் தேர்தல் வரும் ஜூன் 7 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ள நிலையில், தற்போதைய தலைவர் புளோரெண்டினோ பெரெஸ் வாக்காளர்களைக் கவர ஒரு மாபெரும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஸ்பானிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பெரெஸ், தான் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், கிளப் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொகையைச் செலவழிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

வரும் செவ்வாய்க்கிழமை அன்று, சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடும் ஒரு முன்னணி கிளப்பின் நட்சத்திர வீரருக்காகக் குறைந்தபட்சம் €150 மில்லியன் யூரோ (சுமார் 1,350+ கோடி ரூபாய்) மதிப்பிலான மாபெரும் ஆஃப்பரை ரியல் மேட்ரிட் சமர்ப்பிக்கும் என்று பெரெஸ் உறுதியளித்துள்ளார். இது நடந்தால், ரியல் மேட்ரிட் வரலாற்றில் ஒரு வீரருக்காக வழங்கப்படும் மிக அதிகபட்ச தொகையாக இது இருக்கும்.

அவர் இங்கிலீஷ் பிரீமியர் லீக் வீரர் கிடையாது என்பதை பெரெஸ் தெளிவுபடுத்தியுள்ளார். உலக கால்பந்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்தும் அளவிலான "கலாக்டிகோ" தர நட்சத்திரம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் எர்லிங் ஹாலண்ட், மைக்கேல் ஒலிஸே, ஜெரெமி டோகு அல்லது ஹாரி கேன் ஆகியோரும் இல்லை என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதனால் பிஎஸ்ஜி அணியின் ஜோவோ நெவ்ஸ் அல்லது விட்டின்ஹா ஆகியோராக இருக்கலாம் என்று கால்பந்து வட்டாரங்கள் கணிக்கின்றன.

இதனிடையே, அடுத்த சீசனுக்கான முக்கியமான புதிய ஒப்பந்தங்கள் மற்றும் அணியின் எதிர்கால திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் எனவும் பெரஸ் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரியல் மாட்ரிட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. "தேர்தலில் வெற்றி பெற்றால், ரியல் மாட்ரிட் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தத்தை நிறைவேற்றுவோம்" என்ற பெரஸின் உறுதி தற்போது ஐரோப்பிய கால்பந்து வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, பெரெஸ் தனது தேர்தல் பிரசாரத்தில் பயிற்சியாளராக ஜோஸ் மொரின்ஹோவை மீண்டும் கொண்டு வருவது, இப்ராஹிமா கொனாட்டே மற்றும் டென்சல் டம்ப்ரைஸ் ஆகியோரை அணியில் சேர்ப்பது போன்ற அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.