எப் சி அன்டோரா அணியின் கோல்கீப்பர் ஜீசஸ் ஓவோனோவுக்கு 12 போட்டிகளில் விளையாட கால்பந்து கூட்டமைப்பு தடை விதித்துள்ளது.
மத்திய ஆப்பிரிக்காவின் எக்குவட்டோரியல் கினி நாட்டை சேர்ந்தவர் ஜீசஸ் ஓவோனோ. அந்நாட்டின் தேசிய கால்பந்து அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
எப் சி அன்டோரா அணியில் கோல்கீப்பராகவும் ஜீசஸ் ஓவோனோ உள்ளார்.
நவம்பர் 2 அன்று, ஸ்பெயின் இரண்டாம் பிரிவு லீக்கில் அன்டோரா மற்றும் டெனரிப் அணிகளுக்கு இடையே ஒரு போட்டி நடைபெற்றது.
ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் ஓவோனோ, டெனரிப் அணி முன்கள வீரர் டி மிகுவலைக் கடுமையாகத் தாக்கியதால், நடுவர் அவருக்குச் சிவப்பு அட்டை காட்டினார்.
தாக்குதலால் படுகாயமடைந்த 30 வயதான டி மிகுவல் சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார்.
நடுவரின் அறிக்கையை ஆய்வு செய்த ஒழுங்குமுறைக் குழு, எதிரணி வீரரின் மார்பில் தனது காலால் அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்தியதற்காக ஓவோனோவுக்குச் சிவப்பு அட்டை வழங்கப்பட்டதாக கூறியுள்ளது.
இந்தச் சம்பவத்தின் தீவிரத்தையும் அதன் சோகமான விளைவுகளையும் கருத்தில் கொண்டு, அதிகபட்சமாக 12 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படும் என்று கூட்டமைப்பு கூறியுள்ளது.
இந்தச் சம்பவத்தால் நிறுத்தப்பட்ட போட்டியை மீண்டும் நடத்த வேண்டாம் என்றும் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
போட்டி நிறுத்தப்பட்டபோது இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.
துயரச் சம்பவத்தின் பின்னணியில், மீதமுள்ள ஆட்டத்தைத் தொடராமல் போட்டியை முடித்துக்கொண்டது ஒரு மரியாதைக்குரிய முடிவு என்று கூட்டமைப்பு கூறியுள்ளது.
டி மிகுவலின் மரணம் தனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியது என்றும் ஜீசஸ் ஓவோனோ தெரிவித்துள்ளார்.
அவர் தற்போது குடும்ப உறுப்பினர்களுடன் தங்கியிருப்பதாக அன்டோரா பயிற்சியாளர் கார்லஸ் மான்சோ கூறினார்.
ஆட்டத்திற்குத் திரும்புவதா வேண்டாமா என்பதை ஓவோனோவே முடிவு செய்வார் என்றும், எப்போது திரும்புவார் என்றும் அவர் கூறினார்.
கிளப் தரப்பிலிருந்து எந்த அழுத்தமும் இருக்காது என்றும் அவர்கள் அவருக்கு எல்லா வகையிலும் ஆதரவளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.