வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12:30 மணிக்கு பிபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா - ஸ்பெயின் அணிகள் மோதவுள்ளன.
அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லியோனல் மெஸ்ஸியின் ஆக்ரோஷமான ஆட்டமே அவ்வணியை இறுதிப்போட்டி வரை இட்டு வந்துள்ளது எனலாம்.
சுவாரஸ்யமாக இறுதிப்போட்டியில் மெஸ்ஸி மோதப்போவது ஒரு காலத்தில் தன் கைகளில் குழந்தையாக ஏந்தியிருந்த ஒரு வீரருடன். ஸ்பெயின் அணியை சேர்ந்த அந்த இளம் வீரர் பெயர் லாமின் யமால் (19 வயது).
அப்போது மெஸ்ஸிக்கு 20 வயது. உலகின் இளம் கால்பந்து நட்சத்திரமாக வளம் வந்த காலம்.
2007 இல் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமான யுனிசெப் அமைப்புக்காக தொண்டுப் பணியாக ஒரு காலெண்டர் போட்டோஷூட்டில் மெஸ்ஸி பங்கெடுத்தார்.
பார்சிலோனாவில் உள்ள கேம்ப் நௌ மைதானத்தில், உடை மாற்றும் அறைக்கு அருகிலுள்ள ஒரு அறையில், ஒரு சிறிய பிளாஸ்டிக் தொட்டியில் ஒரு குழந்தை வைக்கப்பட்டு, அந்தக் குழந்தையுடன் மெஸ்ஸியின் புகைப்படம் எடுக்கப்பட்டது. அந்த குழந்தை யமால்.
யமாலின் தாய் ஷீலா எபானாவுக்கு அப்போது 16 வயதுதான். கினியாவை சேர்ந்த ஷீலா, ஸ்பெயனின் கட்டலோனியாவில் உணவு பரிமாறுபவராகப் பணிபுரிந்தார்.
அங்கு அவர், மொராக்கோவை சேர்ந்த முனீர் நஸ்ராவியை மணந்தார். இருவரும் தங்கள் மகன் யமாலை ஸ்பெயினின் மட்டாரோ நகரில் வளர்த்தனர்.
யமாலின் பெற்றோர் யுனிசெப் நடத்திய குலுக்கலில் பங்கேற்றனர். பரிசை வென்றதன் மூலம், பார்சிலோனா வீரர் ஒருவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. விதி அவர்களை மெஸ்ஸியை சந்திக்க வைத்தது.
இந்தப் போட்டோஷூட் அசோசியேட்டட் பிரஸ் புகைப்படக் கலைஞர் ஜான் மான்போர்ட் என்பாரால் மேற்கொள்ளப்பட்டது.
ஏபிசி அறிக்கை ஒன்றில், மெஸ்ஸி மிகவும் கூச்ச சுபாவம் உடையவர் என்றும், ஆரம்பத்தில் அந்தச் குழந்தையை எப்படிப் பிடிப்பது என்று அவருக்குத் தெரியவில்லை என்றும் ஜான் மான்போர்ட் விவரிக்கிறார்.
இந்தப் புகைப்படங்கள் பல ஆண்டுகளாகப் பொதுப் பார்வைக்கு வராமல் இருந்தன. பின்னர், 2024ல், லமின் யமாலின் தந்தை முனீர் நஸ்ராவி, அவற்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
ஸ்பெயின் அணியின் மிகப்பெரிய நம்பிக்கை லமின் யமால் ஆவார். வெறும் 19 வயதிலேயே, கால்பந்து உலகில் அதிகம் பேசப்படும் வீரர்களில் ஒருவராக மாறியுள்ளார்.