கால்பந்து

மெஸ்சியை கண்டு அஞ்சாதீர்கள்.. அவரை முற்றிலுமாக முடக்குவது சாத்தியமற்றது: பயிற்சியாளர் அறிவுரை

மெஸ்சியை முற்றிலுமாக முடக்குவது எந்தவொரு அணிக்கும் ஒரு யதார்த்தமற்ற நோக்கம் என்று இனியெஸ்டா கூறினார்.

அமெரிக்காவில் நாளை நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், அர்ஜென்டினா வீரர் மெஸ்சியை முற்றிலுமாகத் தடுக்க முயற்சி செய்து உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள் என்று பயிற்சியாளர் ஆண்ட்ரெஸ் இனியெஸ்டா ஸ்பேயின் அணிக்கு ஒரு தெளிவான அறிவுரையை வழங்கினார்.

ஸ்பெயினின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் திறவுகோல் மெஸ்சியை செயலிழக்க செய்வதில் இல்லை என்றும், மாறாக ஸ்பெயினின் தனித்துவமான அடையாளத்தைக் கடைப்பிடித்து, பந்தை அதிக நேரம் தன்வசம் வைத்திருப்பதிலும்தான் உள்ளது என்றும் அவர் கூறினார்.

நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, இத்தொடரில் அதிக கோல் அடித்த அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மேலும், மெஸ்சியின் கடைசி உலகக் கோப்பை போட்டியாக இது அமையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மீண்டும் ஒருமுறை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவர் ஆவலாக உள்ளார்.

39 வயதான அவர் ஏற்கனவே எட்டு கோல்களை அடித்துள்ளார். அதே சமயம், ஸ்பெயின் அணி ஏழு போட்டிகளில் தோல்வியடையாமல், ஒரே ஒரு கோலை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது.

இந்நிலையில் ஸ்பெயின் அணியின் முன்னாள் வீரர் இனியெஸ்டா அளித்த பேட்டியில், மெஸ்சியை முற்றிலுமாக அமைதியாக்குவது எந்தவொரு அணிக்கும் ஒரு யதார்த்தமற்றது என்று கூறினார்.

இதுகுறித்து மேலும் கூறிய அவர், “அவரை முற்றிலுமாக முடக்குவது சாத்தியமற்றது. ஸ்பெயின் தங்களது ஆட்டத்தின் மூலம், வாய்ப்புகளை உருவாக்கி கிடைக்கும் நேரத்தில் துல்லியமாகச் செயல்பட வேண்டும்.

ஒவ்வொரு போட்டியிலும் மெஸ்சி காட்டும் உறுதி, விடாமுயற்சி மற்றும் அவர் செய்யும் எல்லாவற்றையும் நாம் தலைவணங்கித்தான் ஆக வேண்டும்.

மெஸ்சியை கட்டுப்படுத்துவதை மட்டுமே ஒரு வியூகமாக பார்க்காமல் இருக்க வேண்டும். தங்களை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற கால்பந்து பாணியை ஸ்பெயின் நம்ப வேண்டும்.

உங்கள் ஆட்டத்தை நம்புங்கள், மெஸ்சியைக் கண்டு அஞ்சாதீர்கள். ஸ்பெயின் அணியை பொறுத்தவரை யார் கோல் அடித்தாலும் எனக்குக் கவலையில்லை. முன்பை போலவே நாம் சாம்பியன்களாக வெளியேறுவதுதான் முக்கியம்.

வெற்றி கோலாக அது அமைந்தால் மட்டும் போதும், யார் கோல் அடிக்கிறார்கள் என்பது இரண்டாம் பட்சம்தான்” என்று அவர் கூறினார்.