உலக கோப்பை கால்பந்து தொடர் அடுத்த மாதம் (ஜூன்) 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் 48 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகள் இணைந்து இத்தொடரை நடத்துகின்றன.
உலக கோப்பையில் விளையாட இருக்கும் 48 அணிகளில் ஈரானும் ஒன்று. அமெரிக்காவின் அரிசோனாவின் டஸ்கானில் ஈரான் அணி பயற்சி மேற்கொள்ள பிஃபா ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் அமெரிக்கா உடனான போர் பதற்றம் காரணமாக அமெரிக்காவில் பாதுகாப்பு கவலை அளிப்பதாக ஈரான் உணர்கிறது.
இதனால் தங்களுடைய பயிற்சி முகாமை மெக்சிகோவிற்கு மாற்ற பிஃபா-விடம் ஈரான் கால்பந்து பெடரேசன் கோரிக்கை வைத்தது. இதை பிஃபா ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து ஈரான் மெக்சிகோவில் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறது. பயிற்சி முகாமை மாற்ற பிஃபா-வின் அனுமதி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் குரூப் ஜி-யில் இடம் பிடித்துள்ளது. கலிபோர்னியாவில் நியூசிலாந்தை ஜூன் 15-ந்தேதியும், பெல்ஜியத்தை 21-ந்தேதியும், எகிப்தை 26-ந்தேதியும் எதிர்கொள்கிறது. எகிப்தை சியாட்டில் எதிர்கொள்கிறது.