உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் இ பிரிவில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் வலுவான ஜெர்மனியை குராசோ அணி எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் பெலிக்ஸ் நிமிச் கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் குராசோ வீரர் லிவனோ கமெனிசியா கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை அடைந்தன.
இதையடுத்து ருத்ர தாண்டவம் ஆடிய ஜெர்மனி வீரர்கள் அடுத்தடுத்து கோல்களை அடித்தனர். அதன்படி, நிகோ ஸ்கால்டர்பெக் 38-ஆவது நிமிடத்திலும், ஹைய் ஹவெஸ்ட் 45-ஆவது நிமிடத்திலும், ஜமல் முசிலா 47-ஆவது நிமிடத்திலும், நதினில் பிரவுன் 68-ஆவது நிமிடத்திலும், டென்னிஸ் உன்தவ் 78-ஆவது நிமிடத்திலும், ஹைய் ஹவெஸ்ட் (2வது கோல்) 88-ஆவது நிமிடத்திலும் கோல் அடித்து மிரட்டினர்.
ஒருபக்கம் ஜெர்மனி வீரர்கள் ஆதிக்கம் செலுத்த, மறுப்பக்கம், குராசோ வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளை ஜெர்மனி வீரர்களும், கோல் கீப்பரும் முறியடித்தனர்.
மிகவும் பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியின் றுதியில் 7-1 என்ற கோல் கணக்கில் குராசோ அணியை எளிதில் வீழ்த்தி ஜெர்மனி அபார வெற்றிபெற்றது. ஜெர்மனி வீரர் ஹைய் ஹவெஸ்ட் 2 கோல்களை (45வது, 88வது நிமிடங்கள்) அடித்தார்.
குராசோ அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் தகுதி பெற்று முதல் முறையாக உலகக் கோப்பை தொடரில் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக போட்டியின் முதல் பாதியில் குராசோ அணியினருக்கு மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்து உற்சாகமூட்டினர்.