உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றில் க்ரூப் I பிரிவில் இடம்பெற்றுள்ள ஈராக் மற்றும் நார்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முன்னதாக இதே பிரிவில் இடம்பெற்றுள்ள பிரான்ஸ் மற்றும் செனகல் அணிகள் மோதின. இந்த நிலையில், ஈராக் மற்றும் நார்வே அணிகள் இடையிலான போட்டி போஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே கோல் அடிக்க முனைப்பு காட்டிய நார்வே அணி தனது முதல் கோலை 29-ஆவது நிமிடத்தில் அடித்தது. டேவிட் மொலெர் அமைத்து கொடுத்த செட்டிங்கை எர்லிங் ஹாலந்து கோலாக மாற்றி தனது அணியை முன்னிலைக்கு கொண்டுவந்தார்.
இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 39-ஆவது நிமிடத்தில் ஈராக் வீரர் ஆமிர் அலமாரி அசிஸ்ட்-ஐ சரியாக பயன்படுத்தி ஏமி ஹொசைன் கோல் அடித்தார். இதனால் 1-1 என்ற கணக்கில் போட்டி சமனுக்கு வந்தது. எனினும், இந்த நிலை ஆட்டத்தின் 43-ஆவது நிமிடத்தில் மாற நார்வே வீரர் ஹாலந்து தனது 2-ஆவது கோலை அடித்தார். இதனால் நார்வே 2-1 என மீண்டும் முன்னிலைக்கு வந்தது.
ஆட்டத்தின் முதல் பாதியில் 2-1 என நார்வே முன்னிலையில் நீடிக்க 2-ஆவது பாதி ஆட்டம் தொடங்க இரு அணிகளும் வீரர்களை மாற்ற தொடங்கின. ஆட்டத்தின் 76-ஆவது நிமிடத்தில் நார்வே வீரர் மார்டின் ஒடிகார்ட் அமைத்த செட்டிங்கை லியோ ஆஸ்டிகார்டு கோலாக மாற்ற நார்வே அணி 3-1 என்ற கணக்கில் ஆதிக்கம் தொடர்ந்தது.
இதுதவிர ஆட்டத்தின் இறுதியில் ஈராக் வீரர் ஹொசைன் செய்த பிழை காரணமாக நார்வே அணிக்கு 4-ஆவது கோல் கிடைத்தது. இறுதியில் நார்வே அணி 4-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.