எம்பாப்வே  
கால்பந்து

FIFA WorldCup: எம்பாப்வே இருக்க பயமேன்.. பராகுவேயை பந்தாடிய பிரான்ஸ்

காலிறுதியில் விளையாடும் கடைசி 8 அணிகள் பட்டியலில் இடம்பிடித்தது

2026 உலகக் கோப்பை கால்பந்து காலிறுதிக்கு முந்தைய 16 அணிகள் சுற்று போட்டியில் பிரான்ஸ், பராகுவேயை எதிர்கொண்டது.

முதல் பாதி

அதிகாலை 2.30 மணிக்கு அமெரிக்காவின் பிலடெல்பியா மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதல் பாதியில் யாரும் கோல் அடிக்கவில்லை.

தேர்ந்த அணியான பிரான்ஸ் எவ்வளவோ முயன்றும் ஒரு கோல் கூட அடிக்க விடாமல் பராகுவே தடுத்தது.

இரண்டாம் பாதி

முதல் பாதி 0-0 என முடிவடைய 2ஆம் பாதியில் கோல் அடிக்கும் முயற்சியில் இரு அணிகளும் தீவிரம் காட்டின. இரண்டாம் பாதியில், ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் பிரான்ஸ் கேப்டன் கைலியன் எம்பாப்பே பெனால்டி மூலம் ஒரு கோல் அடித்தார்.

இதன்மூலம் பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் போட்டியில் முன்னிலை பெற்றது. இறுதிவரை இதை பிரான்ஸ் தக்க வைத்தது. சாதராண ஆட்டம் முடிந்து கூடுதலாக 10 நிமிடம் வழங்கப்பட்டபோதும் வேறு யாரும் கோல் அடிக்காததால் பிரான்ஸ் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

32 அணிகள் சுற்றில் ஜெர்மனியை வீழ்த்திய பராகுவே இந்த 16 அணிகள் சுற்றில் தோல்வியை தழுவி உள்ளது.

பிரான்ஸ் கேப்டன்

இன்றைய ஆட்டத்தில் பராகுவேவுக்கு எதிராக வெற்றியை தீர்மானித்த கோல் நடப்பு உலகக் கோப்பையில் கிலியன் எம்பாப்பே அடித்த 7வது கோல் ஆகும்.

இதன் மூலம், கோல்டன் பூட் ரேஸில் மெஸ்ஸியுடன் கிலியன் எம்பாப்பே இணைந்துள்ளார்.

மேலும், உலகக் கோப்பை வரலாற்றில் தனது 19வது கோலை அடித்ததன் மூலம், அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸியை விட ஒரு கோல் மட்டுமே பின்தங்கியுள்ளார். மெஸ்ஸி உலகக் கோப்பை வரலாற்றில் 20 கோல்களை அடித்திருக்கிறார்.

மொராக்கோவுடன் மோதல்

இன்றைய வெற்றி மூலம் காலிறுதிக்கு தகுதி பெற்ற பிரான்ஸ் அதில் மொராக்கோவை எதிர்கொள்ளும். இந்த ஆட்டம் வியாழக்கிழமை (ஜூலை 9) இந்திய நேரப்படி அதிகாலை 1:30 மணிக்கு நடைபெறும்.

முன்னதாக 16 அணிகள் சுற்றில் கனடாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய மொராக்கோ காலிறுதியில் விளையாடும் கடைசி 8 அணிகள் பட்டியலில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பையின் காலிறுதிக்கு இரண்டு முறை முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி மொராக்கோ ஆகும்.